அதிகார மாற்றங்களால் பாதிப்படைந்தது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமே! – ம.குகநாதன்

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட அதிகார மாற்றங்களினால் மிகவும் பாதிப்புள்ளானது கல்வி திணைக்களங்கள்தான். இதில் நிறைந்திருப்பது தங்களுடைய சுயலாபம் மட்டுமே தவிர எந்த அர்ப்பணிப்பும் இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மேற்கு வலயமே பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதென மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ம.குகநாதன் தெரிவித்தார்.

தற்போதைய கல்வி நிலைதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதேச சபை உறுப்பினர் இதனைக்குறிப்பிட்டார்.

பிரதேச சபை உறுப்பினர் மேலும் கூறுகையில்,

படுவான்கரை மண்ணின் வளத்தையும், தனித்துவத்தையும், திறமையையும் வளர்த்தெடுக்கும் தூரநோக்கு பார்வையோடு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி வலயம் பாரிய மாற்றத்தை கண்டு வளர்ந்து வரும் வேளையில்தான் ஆசிரியர்கள் இடமாற்றம் அதைத்தொடர்ந்து வலயத்திற்கான பணிப்பாளர் இடமாற்றம் இடம்பெற்றிருக்கின்றது, இதில் இடமாற்றங்களை ஏற்கமுடியாது என்பதை கூறவில்லை, மாறாக அவ்வெற்றிடத்திற்கான பதிலீட்டு ஆசிரியர்கள் இவ்வலயத்திற்கு வந்தார்களா? என்பதுதான் பிரச்சினை.

இந்த பிரதேசங்களில் பிறந்து வளர்ந்து எமது சமூகத்தின் கல்வி நிலமையை கண்ணூடாகக் கண்ட கல்வியாளர்களும் தங்களுடைய சொந்த நலன் கருதி பட்டணத்தை நோக்கி படையெடுத்து சென்றிருப்பதுதான் வேதனையளிக்கிறது. இவ்வாறான நிலையில்தான் இன்று இந்தவலயத்திற்குட்பட்ட கிட்டத்தட்ட அனைத்துப் பாடசாலைகளிலும் சில வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இன்றியே ஒரு தவணை முடிவடைய இருக்கின்றது. 56 பாடசாலைகளிலும் ஏற்கனவே இருந்த 66 ஆசிரியர்கள் வெற்றிடத்தோடு மேலும் 102 ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். பதிலாக வந்தவர்கள் 28 ஆசிரியர்கள் மட்டுமேயாகும். ஆக இதுதான் இந்த வலயத்தில் காணப்படும் பெரிய துண்டு விழும் தொகை. இந்த சிக்கலினை கருத்தில் கொள்ளாமல் இடமாற்றங்கள் நடந்தேறியிருப்பது எமது சமூகத்திற்கு ஏமாற்றமே. ஆசிரியர்களுக்கான உரிமைகள் மறுக்கமுடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று ஆனால் மாணவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுகின்றதே, இது சம்மந்தமாக குஞ்சு அரசியல்வாதிகள் முதல்கொண்டு கொளுத்த அரசியல் வாதிகள் வரை எவருமே இதைப்பற்றி குரல் கொடுக்காமல் இருப்பதும் வியப்பாகும், ஆசிரியர் பற்றாக்குறை தீர்ப்பது தொடர்பாக முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் தனது முயற்சியில் சில தத்துணிவான நடவடிக்கைகள் எடுத்திருந்தார் உண்மையிலே வரவேற்கதக்கதாகும். இந்த முயற்சி தொடரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. என்றார்.