கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு பெரும்திரளான மக்கள் வருகை.

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று(04) இரவு நடைபெறவுள்ள மகாசிவராத்திரி விரதப்பூசையினை கண்டுகளிப்பதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இன்று காலையில் இருந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் வருகைதந்து கொண்டிருக்கின்றனர்.

இன்றைய மகாசிவாரத்திரி விரதத்தினைச் சிறப்பித்து, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாறு நாட்டிய நாடக வடிவில் அரங்கேறவுள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு சம்யோஜனா மற்றும் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் இணைந்து நடாத்தும் “ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் நாட்டியாஞ்சலி” நிகழ்வானது இன்று கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.திருமதி.உஷாந்தி நேஷகாந்தன் அவர்களின் நெறியாள்கையில் நிகழ்த்து வடிவில் கொக்கட்டி ஈசன் சரிதம் எனும் நாமத்தில் முதல்தடவையாக அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது.