மகிழடித்தீவில் அமைய இருக்கும் இறால் வளர்ப்புத் திட்டத்தை நாம் முற்றாக எதிர்க்கின்றோம் – சி.புஸ்பலிங்கம்.

(படுவான் பாலகன்) மகிழடித்தீவு மற்றும் முதலைக்குடா, ஆகிய கிராமங்களை அண்டிய அரச காணிகளை மக்கள் பராமரித்து வந்தனர் பின்னர் 1984 ஆம் ஆண்டு காணியை தனியார் கம்பனி ஒன்று அவ்வாறு மக்களிடமிருந்து வந்த காணிகளை மீளப்பெற்றுக் கொண்டு இறால் பண்ணை ஒன்றை நடாத்திக் கொண்டு வந்தனர். பின்னர் 1987.01.27 அன்று இராணுவ நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டு அந்த இறால் பண்ணையில் தொழில் புரிந்த பல நூற்றுக் கணக்கானோரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதன் பின்னர், அன்றிலிருந்து அந்த இறால் வளர்ப்புப் பண்ணை செயற்படாமலிருந்து வந்தது.

என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசடித்தீவு கிராமத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(03) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

பின்னர் தனிப்பட்ட சிலர் அதிலே உள்ள ஒரு சில இடங்களில் மாத்திரம் இறால் வளர்ப்பை நடாத்திக் கொண்டிருந்தனர். அதற்கு மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளைப்) பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணத்தினால், அவர்கள் இறால்பண்ணையை மேற்கொண்டு செயற்படுத்துவதை மக்கள் தடுத்துள்ளனர்.

தற்போது அரசாங்கத்தின் அனுமதியோடு இந்த இறால் பண்ணையை நெக்டா எனும் அமைப்பு, நடாத்துவதற்கு அவர்களது முயற்சிகளைச் செய்து கொண்டு வருகின்றார்கள். இந்த இறால்பண்ணை அமைவதால் எமது பிரதேசத்தின் நீர்வளம் உவர் நீராக மாறிக் கொண்டு வருகின்றது, இறால் பண்ணையில் இருந்து ஆற்றுக்கு வெளியேற்றப்படும் செறிவு கூடிய உவர் நீரால் ஆற்றிலுள்ள மீன்கள் இறக்கும் நிலை ஏற்படுகின்றது, இதனால் நன்நீர் மீன்பிடியாளர்களின் தொழில் வளம் பாதிப்படைகின்றன, என அப்பகுதி மக்கள் எமக்கு முறைப்பாடு தெரிவிக்கின்றனர். இதுபற்றி நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்ட போது அவை உண்மையான விடையம் என எமக்குத் தெரியவந்துள்ளது.

இறால் பண்ணையிலிருந்து வெளியேற்றப்படும் உயர் நீர் செறிவு கூறிய நீர் ஆற்றில் விடப்படுவதனால் ஆற்றிலுள்ள மீங்கள் முட்டியிடுவதற்கும், குஞ்சுகள் பெரிப்பதற்கும் வாய்ப்புக்கள் குறைவாக் உள்ளதாக எமது ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இந்த இறால்பண்ணையை மீள இயங்கச் செய்வதை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் இப்பிரதேசத்தின் தவிசாளர் என்ற ரீதியில் தெரியப்படுத்தியுள்ளேன். இருந்த போதிலும் அரசாங்க ரீதியாக இப்பண்ணை நடாத்தப்படுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாங்கள் அறிகின்றோம்.

இந்நிலையில் எமது பிரதேசத்திற்குட்பட்ட முதலைக்குடா கிராமத்தில் வீட்டுத்தேவைகள் அதிகம் உள்ளன. ஆனால் அங்கு வீட்டுத்திட்டங்களை மேற்கொள்ள காணி இல்லாமலுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, இறால்பண்ணை அமையவிருக்கும் இடத்தில் மாறாக நன்நீர் மீன் வளரப்புத் திட்டத்தை மேற்கொள்ள எமது பிரதேச சபை ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இப்பிரதேச மக்கள் அனைவரும் இந்த இறால்பண்ணை மீண்டும் அமைவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டு இந்த இறால்பண்ணை அமைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துத் தெரிவித்தனர்.