அரசின் செயற்பாடுகளை மட்டக்களப்பு மக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

(படுவான் பாலகன்) தற்போதைய அரசினால் பல்வேறு செயற்றிட்டங்கள் மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஹம்ரெலிய, கிராமசக்தி, என்ரர்பிறைஸ் ஸ்ரீலங்கா போன்ற செயற்றிட்டங்களை மட்டக்களப்பு மக்களும் முழுமையாக பயன்படுத்த வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நேற்று(02) சனிக்கிழமை நடைபெற்ற விவசாய ஆரம்பக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக்குறிப்பிட்டார்.

மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்தும் கூறுகையில்,
விவசாயத்தின் மூலமாக சிறந்த விளைச்சலைப்பெற்று, பொருளாதார ரீதியாக அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும். அதேவேளை வருடாந்தம் கடன்களைப்பெற்றே விவசாயத்தினையும் மேற்கொண்டு வருகின்றோம். விவசாய செய்கையின் போது, பல்வேறு பிரச்சினைகளையும் விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றமை குறித்து எமக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெல்லினை உரிய விலைகளுக்கு வழங்கமுடியாமை, கால்நடைகளின் பிரச்சினைகள், காலநிலை மாற்றம் போன்றவற்றினால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கேற்றவகையில் இப்பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். நெல்லினை உடனடியாக விற்பதனை விடுத்து, அவற்றினை களஞ்சியப்படுத்தி விற்பதன் மூலமாக அதிக விலைக்கு விற்கமுடியும். இதற்கு களஞ்சியப்படுத்தல் வசதிகள் ஒவ்வொருவீடுகளிலும் இல்லாமை பிரச்சினையாக இருந்தாலும், இவ்வாறான களஞ்சியசாலைகளை அமைப்பதெற்கென வங்கிகளில் கடன்களை பெறமுடியும். அதே போன்று அரசினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஹம்ரெலிய, கிராமசக்தி, என்ரர்பிறைஸ் ஸ்ரீலங்கா போன்ற செயற்றிட்டங்களின் முழுப்பலனையும் மட்டக்களப்பு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்கான காணி இன்னமும் வர்த்தமானிப்படுத்தப்படாமையே உள்ளது. இதற்கான முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டுள்ளோம். ஆனாலும் நீண்டகாலமாக கால்நடைகளை பராமரிக்கவென ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் தரைகளில் கால்நடைகளை வளர்க்க முடியும். சிறுபோக விவசாயச் செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், உரிய இடங்களுக்கு கால்நடையாளர்கள் தங்களது கால்நடைகளை கொண்டுசெல்ல வேண்டும். அவ்வாறு கொண்டுசெல்ல தவறுபட்சத்தில் கால்நடைகளை கட்டிவளர்க்க வேண்டும். அதையும் மீறியதாக பயிர்களை மாடுகள் உண்ணுமாகவிருந்தால், அதற்குரிய தண்டப்பணத்தினை உரிய கால்நடை உரிமையாளர்கள் செலுத்த வேண்டி ஏற்படும். அதேபோல கட்டக்காலி மாடுகள் தொடர்பில் பிரதேச சபையினர், காவல்துறையினருடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பயிர்களை மாடுகள் உண்ணுவதுதொடர்பிலான பிரச்சினைகளுக்கு தண்டப்பணங்களை அறவிடுவது தொடர்பில் குழுவொன்றினை நியமித்து அதன்மூலமாக செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் பிரதேச செயலாளரிடம் கேட்டுக்கொண்டார்.

தீர்மானங்கள் பல எடுக்கப்படுகின்றன ஆனால் அவை அனைத்தும் செயற்படுத்தப்படுவதில்லை. சில அதிகாரிகள் செய்யும் பிழையகளினால் ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கே பிழைகூறுகின்ற நிலையும் காணப்படுகின்றது. அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கென்றே இருக்கின்றனர். அதற்கேற்றவகையில் அதிகாரிகளும் செயற்பட வேண்டும். அனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும். என்றார்.