மட்டு. உறுகாமம் பிரிவு நீர்ப்பாசன திட்டத்தின் 8698 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுகாமம் பிரிவு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் இம்முறை 7828 ஏக்கரிலும் சிறிய நீர்ப்பாசன குளங்களின் நீர்ப்பாசன வசதியுடன்; 870 ஏக்கரிலுமாக மொத்தம் 8698 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உறுகாமம் நீர்ப்பாசன திட்ட சிறுபோகச் செய்கை ஆரம்பக்கூட்டம் வெள்ளிக்கிழமை (01) மாலை ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னம், மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வை.பி.இக்பால், விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) வி.பேரின்பராஜா, கமநல சேவைகள் மாவட்ட உதவிப்பணிப்பாளர், நீர்ப்பாசனப் பணிப்பாளர் (மத்தி) பொறியியலாளர் எஸ்.எம்.பி.எம்.அஸார் , நீர்ப்பாசனப்பணிப்பாளர் (மாகாணம்), நீர்ப்பாசன விவசாய, கமநல, திணைக்களங்களின் பிரதிநிதிகள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
உறுகாமம் பிரிவு நீர்பாசன திட்டத்தின் கீழ் பாலகன் வெளி கண்டம் 850 ஏக்கர், கூமாச்சோலை கண்டம் 805 ஏக்கர், சமுளங்குடா கயிறுவெளி கண்டம் 565 ஏக்கர், மயிலவட்டுவான் மாங்களமடு கண்டம் 550 ஏக்கர், நேரங்குடா தம்பானம்வெளி கண்டம் 390 ஏக்கர், ஊரருகு வெல்லங்குடா கண்டம் 165 ஏக்கர், பள்ளத்து வெளி கண்டம் 670 ஏக்கர், பெருவெளி கண்டம் 795 ஏக்கர், சின்னவெளி, சின்னாளள்வெளி புதுவெளிக்குளத்துவட்டை கண்டம் 900 ஏக்கர், குளத்துவட்டை கண்டம் 500 ஏக்கர், பாலாமடு வடக்கு கண்டம் 302 ஏக்கர், பாலாமடு தெற்கு கண்டம் 291 ஏக்கர், தொடுவில்சோலை கண்டம் 600 ஏக்கர், பளவெட்டுவான் கண்டம் 280 ஏக்கர்,தளவாய் கண்டம் 165 ஏக்கர், செய்கை பண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கித்துள்வெவ குளத்தின் மூலம் 470 ஏக்கரிலும், வெலிக்காகண்டிய குளம் 400 ஏக்கரிலும் சிறிய நீர்பாசன குளங்களின் நீர்ப்பாசன வசதியுடன் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10.03.2019 விவசாய வேலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். 25.03.2019 ஆந் திகதி விதைப்பு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் முன்று அல்லது முன்றரை மாத நெல்லினம் பயன்படுத்தப்ட வேண்டும் சித்திரை 15.04.2019 விதைப்பு முடிவுத் திகதி எனவும் விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர். 05.08.2019 அறுவடைகொண்டு செல்லும் இறுதித் திகதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.