கலப்படக்குழந்தை பற்றிய விளம்பரங்கள் பற்றி கவனமாக இருங்கள்.

டாக்டர்.சிவச்சந்திரன் சிவஞானம்

கலப்படக்குழந்தை
……………………………

இப்போது எங்கே பார்த்தாலும், இந்திய கருத்தரிப்பு நிலையங்களின் விளம்பரஙகள். இந்த விளம்பரம் அனைத்தும் வடகிழக்கை மையமாக வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளன. சிங்களவர்களை மையப்படுத்தி இவ்வாறான விளம்பரங்களை காணக்கைடைப்பதில்லை.

இலவச விமான‌ டிக்கெட், தங்குமிடம் என அவர்கள் கொடுக்கிற சலூகைகளைப்பார்க்கும்போதுதான் பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவுக்கு பலமுறை சென்ற அனுபவத்தில் நான் அறிந்த விடயம் இந்தியா என்றாலே ஏமாற்றுக்குப் பஞ்சமில்லாத இடம்.

கருத்தரிப்பு மையங்களிலெவ்வாறான ஏமாற்றுக்கள் செய்யப்படலாம்? எப்படி அதிக சலூகைகளுடன் குறைந்த விலைக்கு உங்களுக்குக் குழந்தை தரலாம்?

அதற்குமுன், கருத்தரிப்பு மையங்களில் எவ்வாறு பரிசோதனைக்குழாய் குழந்தை உருவாக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

முதலில் பெண்ணுக்கு ஹோர்மோன்கள் வழங்கப்பட்டு அவளில் கருமுட்டை உருவாக்கம் தூண்டப்படும். அதன்போது அவளிலே பல முட்டைகள் உருவாகும், சில பெண்களில் 10 ‍ – 20 வரை கரு முட்டைகள்கூட‌ உருவாகும்.

இந்த கருமுட்டைகள் வெளியே எடுக்கப்பட்டு, ஆணின் விந்தனுக்கள் சேர்த்து எம்ரேயோ embryo எனப்படும் சிசு உருவாக்கப்படும்.

ஒரு கருமுட்டையுடன் ஒரு விந்தனு சேர்த்து ஒரு சிசு உருவாகும்.

பத்து கருமுட்டைகள் இருந்தால் பத்து சிசுக்கள் உருவாகும்.

இந்தப் பத்துமே பத்துக்குழந்தைகளாக உருவாகும் சாத்தியம் உள்ளது.

இவ்வாறு உருவான சிசுக்களில் ஒன்று அல்லது இரண்டுதான் பெண்ணின் கருப்பையினுள் உள்ளே செலுத்தப்படும். மிஞ்சியவை வெளியே freez செய்யப்பட்டு பாதுக்காக்கப்படும். அவை பல வருடங்கள் ( 20 – 30 வருடங்கள் வரைகூட) பாதுகாக்கப்படலாம்.

பெண்ணின் கருப்பையினுள் உட்செலுத்தப்பட்ட சிசு குழந்தையாக வளராமல் அழிந்துபோனால், சில மாதங்களின் பின் freez பண்ணப்பட்ட சிசு உட்செலுத்தப்படும்.

இப்போது இந்த செயன் முறைகளில் எங்கேயெல்லாம் ஒருவர் ஏமாற்றப்படலாம்?

ஒரு பெண்ணில் கருமுட்டை உருவாக்கத்தைத்தூண்ட கொடுக்கப்படும் ஹோர்மோன்கள், மிகவும் விலை கூடியவை. அவை கொடுக்கப்படாமல் நீங்கள் ஏமாற்றப்படலாம். அதாவது அந்த ஊசிகள் ஏற்றப்படுவதுபோல பாசாங்குசெய்யப்படும் ஆனால் உண்மையான ஊசிகள் ஏற்றப்படாது. அந்தப்பணமே உங்களுக்கு சலூகையாக வழங்கபடலாம். அந்த ஊசி ஏற்றப்படாமல், எப்படி உங்களுக்கு முட்டை உருவாக்கம் ஏற்பட்டு குழந்தை உருவாகும்?

மேலே சொன்ன படி, ஒரு பெண்ணில் 10 – 20 முட்டைகள் உருவாகும்போது ஒரு சிலதான் அந்தப்பெண்ணின் குழந்தையாக உருவாகும். மிச்ச முட்டைகளுக்கு என்ன நடைபெறுகிறது என்று யாருக்காவது தெரியுமா?

அந்த முட்டைகள் உங்களுக்குப்பயன்படத்தப்படலாம்.

சிலவேளைகளில், உங்களுக்கு உண்மையில் ஊசி போடப்பட்டு முட்டை உருவாக்கம் தூண்டப்படலாம். உங்கள் முட்டை மூலமே குந்ழதையும் உருவாக்கப்படலாம். நீங்களும்சந்தோஷமாக இங்கே குழந்தையுடன் வந்து விடுவீர்கள். உங்கள் கருமுட்டை மூலம் உருவாக்கப்பட்ட மிச்ச சிசுக்களுக்கு என்ன நடந்தது?

அவை இன்னொரு பெண்ணின் கருப்பையினுள் அவளின் கருமுட்டை மூலம் உருவான குழந்தை என்று ஏமாற்றப்பட்டு உட்செலுத்தப்படலாம்.

சிலவேளைகளில், கருமுட்டை உருவாக்கம் தூண்டப்பட முடியாத பெண்களுக்கு இவ்வாறு இன்னொருவரின் கருமுட்டை பயன்படுத்தப்படலாம். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் இரு பெண்களின் அனுமதியுடன் சட்ட ரீதியாக செய்யப்படவேண்டும்.

இங்கே நான் சொல்வது சட்டத்துக்கு புறம்பாக ஒரு பெண்ணின் கருமுட்டைகள் களவாடப்படுவது பற்றி.

சாரம்சம்,

ஒரு பெண்ணின் கருப்பையில் இன்னொரு தம்பதியின் குழந்தை உட்செலுத்தப்படலாம்.
அல்லது,
ஒரு பெண்ணினதும், கணவனினதும் கருவில் உருவான பல சிசுக்கள் பல பெண்களின் கருப்பையினுள் செலுத்தப்பட்டு அவர்களின் குழந்தையாக உருவாக்கப்படலாம்.

இதன்மூலம் லட்சக்கணக்கான பணம் சேமிக்கப்படலாம். அவைதான், இந்த இந்திய கருத்தரிப்பு மையங்களில் வழங்கப்படும் சலூகைகளின் அடிப்படை.

அடுத்து ஒரு பெண்ணுக்கு, செயற்கை கருத்தரிப்பு மூலம் உருவாக்கப்படும் போது பல நியதிகளைப்பார்க்கவேண்டும். இந்தியர்களைப்பொறுத்தவரையில், அவர்களுக்கு அவை எதுவுமே தேவையில்லை, நீங்கள் காசு கொடுத்தால் குழந்தையை உருவாக்கித் தந்துவிடுவார்கள்.

உதாரணத்துக்கு, பல வருடங்களுக்கு முன் நான் கண்ட ஒரு சம்பவம்.

ஒரு பெண் வயது 53.
கணவனின் வயது 64.
எல்லோருக்கும் குழந்தை என்ற ஏமாற்று வார்த்தையை நம்பி இந்தியா போய் கர்ப்பமாக வந்தார். படங்களில் வருவது போலதான், இங்கே இருக்கிற வீட்டைத்தவிர அனைத்தையும் விற்று கார்ப்பமாகி, அதன்பின் அவரின் வயது காரணமாக ஏற்பட்ட நோய்கள் காரணமாக தொடர்ச்சியாக வைத்தியசாலையில் இருந்து, இனியும் பணம் இல்லை என்றபடியால், இலங்கைக்கு வந்தார். இங்கே அம்மாவைக்காப்பாற்ற குழந்தையை குறைமாதத்தில் பிறக்கச் செய்ததால், குழந்தை பல நிரந்தரமான குறைபாடுகளைப்பெற்றுக்கொண்டது.

இறுதியில், எந்தவிதமான சேமிப்பும் இல்லாமல், 53 வயதில் ஒரு குறைபாடுள்ள குழந்தையுடன் அழுதுகொண்டு அந்தபெண் வீடு சென்றது இன்னும் என் கண்முன்னே இருக்கின்றது. அவருடைய கவலையெல்லாம், இந்தப்பிள்ளைக்கென்று இனி எதுவுமே இல்லையே, எனக்கு ஏதும் நடந்தபின் இனி யார் இந்தக்குழந்தையை பார்த்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதே?

இங்கே ஒரு பெண் 53 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைபடுவதல்ல பிரச்சினை, ஆனால், அந்தபெண் ” எந்தச் சிக்கலும் இல்லாமல் எல்லோருக்கும் குழந்தை” என்ற ஒரு இந்திய கருத்தரிப்பு மையத்தின் கவர்ச்சிகரமான விளம்பரத்தால் ஈர்க்கபட்டு, பின்விளைவுகளை யோசிக்கச் செய்யப்படாமல் ஏமாற்றப்பட்டதே பிரச்சினை.

2 வருடங்களுக்கு முன் லயன்ஸ் கழகத்தால் மட்டக்களப்புக்கு அழைத்து வரப்படிருந்தார். அவர் ஒரு வைத்திய‌ நிபுணர் என்று கூறப்பட்டாலும், அவரிடம் நேரடியாக தொடர்புகொண்டபோது, என் தொடர்புகள் அனைத்தையும் தவிர்த்துவிட்டார். ஆராய்ந்துபார்த்ததில் அவருக்கு MBBS கூட இல்லை என்று புரிந்தது. அவரை அழைத்து வந்த லயன்ஸ் கழக உறுப்பினரை தொடர்புகொண்டபோது என்னைப்பேசிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார்.

மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு, வடகிழக்கு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், என்று மட்டும் புரிகிறது.

அடுத்து, இங்கே நடத்தப்படும் முகாம்கள் அனைத்தும் இலவச குழந்தையின்மை மருத்துவ சிகிச்சை என்றுதான் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

குழந்தையின்மை என்ற பிரச்சினைக்கான மருத்துவம் நீண்டகால அடிப்படையில் செய்யப்படவேண்டியது, அது ஒரு நாள் இலவச கிளினிக்கில் தீர்க்கப்படக்கூடிய விடயமல்ல. இங்கே இலவசம் என்று அவர்கள் அழைப்பது, உங்களை ஏமாற்றி இந்தியா அழைத்துப்போவதற்கான உத்தியேயன்றி வேறில்லை.
இந்த விளம்பரங்கள் பற்றி கவனமாக இருங்கள்.

நன்றி

டாக்டர் சிவச்சந்திரன்