கிழக்கு இராணுவத்தளபதி காரைதீவு பிரமுகர்கள் சந்திப்பு!

இலங்கை இராணுவத்தின் கிழக்குமாகாண பொறுப்பதிகாரி இராணுவக்கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் அருண ஜெயசேகர  காரைதீவு முக்கியஸ்தர்களுடன் ஆக்கபூர்வமாக சந்திப்பொன்றை (28) வியாழக்கிழமை நண்பகல் நடாத்தினார்.

அவருடன் இராணுவத்தின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி மேஜர்ஜெயசேன கல்முனை நிலையப்பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன மல்வத்தைநிலையப்பொறுப்பதிகாரி மேஜர் மிலிந்தமுதலிகே ஆகியோரும் வந்திருந்தனர்.

இச்சந்திப்பு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேசசபை வளாகம் தொடக்கம் இருமருங்கிலும் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததைக்காணக்கூடியதாயிருந்தது.

ஆலயத்தலைவர்கள் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் முக்கியஸ்தர்கள்
எனப்பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

சந்திப்பின்போது காரைதீவு தமிழ்மக்கள் எதிர்நோக்கிவருகின்ற பலதரப்பட்ட இனமதநில ரீதியான பிரச்சினைகள் மக்கள் தலைவர்களால் முன்வைக்கப்பட்டன.

அங்கு காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையுரையில் கூறுகையில்:

இப்படியொரு சந்திப்பொன்றுக்கு ஏற்பாடுசெய்த கிழக்கு இராணுவத்தளபதிக்கு முதற்கண் இக்காரைதீவு மண் சார்பாக நன்றிகூறுகிறேன். நாம் சிறுபான்மைக்குள் சிறுபான்மையாக பலதரப்பட்ட சொல்லொணா துன்பங்களுடன்  மனத்தாங்கல்களுடன் அநாதைகளாக வாழந்துகொண்டிருக்கிறோம்.

எமது பிரதேசசபைக்கான காணியில் பல்லாண்டுகாலமாக குடிகொண்டிருக்கும் காரைதீவு இராணுவமுகாம் காணியை எம்மிடம் ஒப்படைக்கவிருப்பதாக கடந்தவருடம் இராணுவ உயரதிகாரியொருவர் வந்துகூறினார். நாமும் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தோம். வருமானம் குறைந்த எமது சபைக்கு ஒரு நிரந்தர சந்தையை அமைக்கலாம் என்றெண்ணி அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளத்தயாரானோம்.

சிநாட்களில் அதே அதிகாரிகள் வந்து எமக்கு 50வீத காணியை தருவதாகவும் மீதி 50வீதகாணியில் தாம் தொடர்ந்து நிலைகொண்டிருக்கப்போவதாகவும் கூறினர். நான் உடனே முடிவெடுக்காமல் ஊரைக்கூட்டிக் கேட்டேன். அவர்கள் அரசபடையின் உதவிதேவை எனவே 50வீத காணியைப்பெறுங்கள் என என்னிடம் ஏகமனதாகக்கூறினார்கள். அந்த முடிவை இராணுவ உயரதிகாரியிடம் சொன்னேன்.

ஆனால் இதுவரை எவ்வித பதிலுமில்லை. காணியுமில்லை. எம்மை அவர்கள்
ஏமாற்றிவிட்டதான உணர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியிலும் ஒருவித
அதிருப்தி நிலவுகிறது. அக்காணியைப் பெற்றுத்தந்தால் உதவியாகவிருக்கும் என்றார்.

அதற்குப்பதிலளித்த கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் அருண ஜெயசேகர
இதுவிடயமாக உயர்பீடத்துடன் பேசிவிட்டு உரிய பதிலையளிப்பதாகக்கூறினார்.

மக்கள் பிரதிதிகள் கூறுகையில் காரைதீவு எல்லைப்பகுதியில் அடிக்கடி
மாட்டெலும்புகள் கொட்டப்படுகின்றன என்று பொலிசாரிடம் முறையிட்டால்
ஆக்கபூர்வமான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படுவதில்லை. இன்றும்
மாட்டெலும்புகள் வீசப்படுகின்றன.  போதைப்பொருள் மாவா போன்றன
பயன்படுத்தப்படுகின்றன.இவற்றை முடிவுக்குக்கொண்டுவரவேண்டும்.என்றனர்.

ஆலயத்தலைவர் சார்பில் காரைதீவு அரசடிப்பிள்ளையார் ஆலயத்திற்குச்சொந்தமான கவடாவில் போக்குவரத்துப்பொலிசார் தற்போது குடிகொள்கின்றனர். அதனை மீட்டுத்தரவேண்டும். வருவது கும்பாபிசேகம் எமக்கு பல நிருவாகப்பணிகள் இருக்கின்றன. அந்த கவடா தேவை. அதைமீட்டுத்தாருங்கள் என்றனர்.

இவ்வாறு பல பிரச்சினைகள் தேவைகள் அநிதியான செயற்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இறுதியில் கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் அருண ஜெயசேகர  உரையாற்றுகையில்::
காரைதீவு தமிழ்மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பதில்
பெருமகிழ்ச்சியடைகின்றேன்.உங்களிடமுள்ள நிருவாக ரீதியான பிரச்;சினைகள் மற்றும் ஆதங்கங்கள் பற்றி விரிவாகச்சொன்னீர்கள். அவற்றைக்கேட்கும்போது கவலையாகவிருந்தது. நிச்சயம் என்னால் முடிந்தவரை அவற்றைக்களைய தீர்க்க நடவடிக்கைஎடுப்பேன். பொய்வாக்குறுதியை தந்துவிட்டு பின்பு அவற்றைச் செய்யாமல் விடும் பழக்கம்எம்மிடமில்லை. எனவேமுடிந்தவரை நடவடிக்கை
எடுப்பேன் என்றார்.