சர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்

சர்வோதைய அமைப்பின் பிராந்திய நிலையத்தினை மீண்டும் கல்முனையில் திறக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரதேசத்தில் உள்ள வறிய மக்கள் பல்வேறுபட்ட நன்மைகளை காலடியில் பெற முடியும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வோதைய அமைப்பின் தலைவர் டாக்டர்.வின்னியா ஆரியரட்ணா மற்றும் இவ் அமைப்பின் உப தலைவர் வேல்முருகு ஜீவராஜ் ஆகியோருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த காலத்தில் கல்முனை வாடிவீட்டு வீதியில் மிகவும் சிறப்பாக இயங்கிய கல்முனை சர்வோதைய நிலையம் ஒரு சில காரணங்களால் அம்பாறை நகருக்கு மாற்றப்பட்டது. இதனால் கல்முனைப் பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய பல்வேறுபட்ட உதவிகளை இழந்தனர். மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அவர்களின் காலடிக்குச் சென்று வீடமைப்பு உதவிகள், மலசலகூட வசதிகள், குடிநீர்க் கிணறுகள், வாழ்வாதார உதவிகள், வறிய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு பணிகள் மற்றும் இன ஐக்கியத்திற்கான இறுக்கமான வேலைத்திட்டங்கள் என்பவற்றை அழகுற மேற்கொண்டு மக்கள் மனதில் உதித்த அமைப்பாக சர்வோதயம் இருந்து வந்தமை வரலாற்றுப் பதிவாகும்.

அத்துடன் வறிய மக்களுக்கான சுயதொழில், கடனுதவிகள், வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கான தொழில்கள் மற்றும் தொழிற்பயிற்சிகள் கலாசார மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை கல்முனையில் சர்வோதைய அமைப்பு சிறப்பாக மேற்கொண்டது.

எனவே இந்நாட்டில் நிரந்தர சமாதானம், சுபீட்சம், சமுகங்களுக்கிடையிலான உறவுப்பாலம், கலாசார மேம்பாடு என உயரிய பணிகளை முன்னெடுக்கின்ற சர்வோதய நிலையத்தினை மீண்டும் கல்முனையில் திறக்க வேண்டும் என்று அந்தக் கோரிக்கைக் கடிதத்தில் கேட்டுள்ளார்.