மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக ஆரம்பக்கூட்டங்கள் 01ஆம் திகதி ஆரம்பம்

சிறுபோகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மார்ச் 01ம் திகதி முதல் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில் சிறுபோக விவசாய நடவடிக்கைகள் குறித்த விதைப்பு ஆரம்பம், முதல் அறுவடை வரையான திகதிகள் தீர்மானிக்கப்படவுள்ளன.

இக் கூட்டங்களில் திணைக்களத் தலைவர்கள், விவசாய, கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள், பண்ணையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், பிரதேச செயலக மண்டபத்தில் மார்ச் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்கு, ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள உறுகாமம், கித்துள்வெவ, வெலிகாகண்டி, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம், பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள நவகிரி, தும்பங்கேணி, சிறு நீர்ப்பாசனத் திட்டங்கள் – வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் மார்ச் 02ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட- கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்ச கல், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் – கட்டுமுறிவு நீர்ப்பாசனம், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம், வாகரைப்பிரதேச செயலகத்தில் மார்ச் 07ஆம் திகதி வியாழக்கிழமை காலை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு, கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், கிரான் கோரகல்லிமடு ரெஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.