காத்தான்குடி,அனுராதபுரத்தில் மட்டுமா? நடந்தது.மனோவுக்கு பகிரங்க மடல்.

கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்கு ஓர் திறந்த மடல்,

தங்களது அமைச்சினால் வடக்கில் யாழ்ப்பாணம் தவிர்ந்த 4 மாவட்டங்களுக்காக 26.02.2019 இன்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட செயலமர்வில் பங்கேற்க எனக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

நன்றிகள் பல.

வினா 01.
செயலமர்வில் முதலாவதாக கலந்து கொண்ட வளவாளர் ஒரு காணொலியைக் காண்பித்தார். அதில் இன நல்லிணக்கம் குறித்து ஒரு பாடல் வருகிறது.
அதில் காத்தான்குடி பள்ளிவாயல் ,அநுராதபுரம் படுகொலைகள் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
அங்கு மட்டுமா படுகொலைகள் நடந்தன.

1995 யூலை 09 ஆம் திகதியன்று முன்னேறிப்பாய்சல் இராணுவ நடவடிக்கையின் போது நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட புக்காரா விமானங்களின் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. 100 க்கு மேல் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அங்கவீனர்களாக்கப்பட்டனர்.

அது போல 1987 மே 26 இல் அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் கோவில் மீது ஒப்பிறேசன் லிபறேசன் இராணுவ நடவடிக்கையின் போது தொடர் செல் தாக்குதலில் 100 க்கு மேல் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இப்படிப் பல வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இவைகள் குறித்தும் அதாவது போரில் ஈடுபட்ட இருதரப்பும் செய்த படுகொலைகள் பற்றியும் அந்தப் பாடலில் குறிப்பிட்டு இருந்தால் இன நல்லிணக்கம் பற்றி நாமும் சிந்திப்போம்.

வினா 02
அரசியல் அமைப்பில், நாளாந்த நடைமுறையில் சிங்கள பௌத்த மேலாதிக்கம் உறுதி செய்யப்பட்ட பின் தமிழர்கள் நல்லிணக்கத்திற்கு வர வேண்டுமெனக் கேட்பது எவ்விதத்தில் நியாயம்.

வினா 03.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில் கந்தரோடையில் இருந்த சமண சமய காலத்து வழிபாட்டு இடங்களை அவர்கள் அழிக்கவில்லை. அவற்றைப் பௌத்த சமய வழிபாட்டு இடங்கள் என போலியாகக் காட்டுவதை நிறுத்தினால் தான் எமக்குள்ளும் நல்லிணக்க உணர்வு வரும்.

வினா 04
திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாரம்பரிய தமிழ் கிராமமான இலங்கைத்துறை முகத்துவாரத்தை லங்காபட்டுன என்ற பெயரில் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சின்னமாக மாற்றியதைக் கைவிட்டால் தான் இன நல்லிணக்கம் வரும்.

நெடுங்கேணி வெடுக்குநாறி மலையும் பேரினவாத வழிபாட்டு மலையாக மாற்றப்பட்டதும் எம்மை நல்லிணக்கம் நோக்கி வரத் தடைப்படுத்துகிறது.

தொல்பொருள் திணைக்களம், வனபரிபாலனத் திணைக்களம் ஆகியவை முழுமையாகவே பேரினவாதத் திணைக்களங்களாக மாறி விட்டன.
அவை மாறாமல் எம்மை மாறச் சொல்லி என்ன பயன்.

காணாமல் போனோரைக் கண்டறிவதற்கு 1994 முதல் பல்வேறு ஆணைக்குழுக்கள் காலத்திற்குக் காலம் வந்துள்ளது.

ஆனால் பிரச்சினைகளின் அளவும் , தேடப்ட வேண்டியோரின் எண்ணிக்கையும் கூடித் தான் வந்துள்ளது.

கலந்து கொண்ட பலர் நிறையக் கேள்விகளைக் கேட்டனர். உங்கள் உத்தியோகத்தர்களைக் கேளுங்கள் ஐயா கூறுவார்கள்.

ஐயா உங்களது சேவைகளை பெரிதும் மதிக்கின்றோம். தயவு செய்து ஒரு பக்கச் சார்பான காணொலிகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி

வேதநாயகம் தபேந்திரன் Facebook

Huwai