திருமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

பொன்ஆனந்தம்

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள கும்புறுபிட்டி பெரிய கரைசை களப்பை விடுவிக்க கோரி மீனவர்கள் ஆர்பாட்டமொன்றை இன்று காலை 9.00மணியளவில் நடாத்தினர்.

ஆர்பாட்டத்தின் இறுதியில் குச்சவெளி கமநலசேவை நிலயத்திற்கு முன்பாக விருந்து பிரதேச செயலகம் வரை ஊர்வலமாகச்சென்ற மீனவர்கள் தமது கோரிக்கையடங்கிய மகஜரை பிரதேச செயலக நிருவாக அதிகாரி எஸ்..கணேஸ்வரனிடம்கையளித்தனர். பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இல்லாமையினால். இவ்வாறு நிரவாக அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த கரைச்சைப்பகுதியில் நீண்டகாலமாக மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை செய்து வந்தபோதும் யுத்தம் முடிவடைந்ததும் அங்குள்ள சுமார்1800ஏக்கர் காரச்சைக்காணியை தனியார்கம்பனிக்கு மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி அரசு உப்பு உற்பத்திக்கு வழங்கியிருந்தது. மீனவ சங்கத்தினால் கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

களப்பு தொழிலிலை நம்பி அதில் ஈடுபடும் 1000 மீனவ தொழிவாளர்கள் வரை உள்ளனர்; இக்களப்பு பகுதிகளில் இறால்நண்டு மீன்கள் போன்றவற்றை ஜீவனோபாயமாக மேற்கொண்டு வருகின்றனர். றைகம் நிறுவனமானது 2009ம் ஆண்டு எமது பெரிய கரச்சியை உப்பளம் செய்வதற்கு நீண்ட நாட் குத்தகைக்கு 1805 ஏக்கர் காணியை எடுத்தது மக்கள் யுத்த நெருக்கடிக்குள் இருந்த நிலையில் இக்காணிகள் முறையற்ற வகையில் எடுக்கப்பட்டடிருந்தன.

இவற்றில் 450 ஏக்கர் காணி உப்பளத்திற்கும் 37 ஏக்கர் காணி தொழிற்சாலைக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 1318 ஏக்கர் காணி கடலின் களப்புகளில் சிறுகடல் தொழில் செய்யும் தொழிலாளர்களின் மீன் நண்டு வளர்ப்புகளுக்கென ஒதுக்கப்பட்டது.

ஆனால் இப்பகுதிகளில் மீன் வளர்ப்பு மற்றும் கொடுவ மீன் வளர்ப்போ நடைபெறுவதில்லை இவர்கள் இப்பகுதியிலிருந்து உப்பளத்திற்கான மேலதிகமான நீரை பெற்றுக்கொள்வதனால் களப்புகளில் சிறுகடல் தொழில் செய்யும் தொழிலாளர்கள் தொழில் ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இவ் றைகம் நிறுவனமானது இப்பகுதியை குத்தகைக்கு எடுக்கும் போது களப்புகளில் சிறுகடல் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதாக கூறினார்கள். நாங்கள் அதை ஏற்கவில்லை. இக்களப்பை விடுவிக்குமாறு பலவிதமான கோரிக்கைளை எமது மீனவர்கள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் 11.09.2018 ஆம் திகதி பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கிணங்க Raigam Eastern Salt Company(Pvt) Ltdநிறுவனத்திற்கு கும்புறுபிட்டி களப்பு பகுதியில் நீண்ட கால குத்தகையில் வழங்கப்பட்ட காணியில் 1000 ஏக்கர் களப்பு பகுதியை நீண்டகால குத்தகையில் இருந்து விடுவிப்பதாக பிரதேச செயலாளர் எழுத்துமூலம் அறிவித்திருந்தார்;. இதற்கு கம்பனி இணங்கியிருந்ததாகவும் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் மாதங்கள் பல கடந்தும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆகையால் எமது பெரிய கரச்சியில் தொழிலாளர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் 1318 ஏக்கர் காணியை மீண்டும் தொழில் நடவடிக்கைக்கு அனுமதி பெற்றுத்தருமாறு கோருகின்றோம்

அத்துடன் அதனூடாக நீர் கொண்டு செல்வதினை தடுத்து உப்பளத்திற்காக அமைக்கப்பட்ட மண் அணைகளை (பெரிய வரம்பு) அகற்றி  தொழில் செய்ய வசதி  ஏற்படுத்தி உதவுமாறும் மீளவும்  கோரிநிற்கின்றோம்

;எமதுமீனவர்கள் உரிய இடங்களில் ஜீவனோபாணத்திற்கான தொழில் முயற்ச்சிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் தவிக்கின்றனர்.

எனவே பலரும் தொழில் செய்து படிப்படியாக முன்னேறி வரும் நிலையில் மேற்படி இன்னல்களை அனுபவிக்கும் குச்சவெளி பிரதேச களப்பு கிராமிய மீனவர்களின் வாழ்வாதாரம் வளம் பெற்று உணவுத்தட்டுப்பாடு நீங்கி நல்லிணக்கம் நிலைபேறாகிட வழிவகை செய்யுமாறு தங்களை வேண்டுகின்றோம். எனவும் தெரிவித்துள்ளனர்.