போதைப்பாவனைகளால் சிலர் சந்தோசத்தை, பணத்தினை இழந்து தவிக்கின்றனர்

போதைப்பாவனைகளால் சிலர் சந்தோசத்தை, பணத்தினை இழந்து தவிக்கின்றனர் என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

குளுவினமடு கிராமத்தில் இன்று(24) நடைபெற்ற கிராம சக்தி வேலைத்திட்டத்தின் இறுதிநாள் பொன்மாலை பொழுது நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இதனைக்குறிப்பிட்டார்.

பிரதேச செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும். இதன்மூலமாக போதைப்பொருள் பாவனை, வறுமை, பொலித்தீன் பாவனை போன்றவற்றை இல்லாமல் செய்ய முடியும். ஓரிரு தசாப்தங்களுக்கு முன்பு பொலித்தீன் பாவனையையே பயன்படுத்தாதவர்களாக இருந்தோம். தற்போது அதிகம் பொலித்தீனையே பாவிக்கின்றோம். இப்பிரதேசத்தினை பொலித்தீன் பாவனை இல்லாத பிரதேசமாக மாற்ற வேண்டும். வறுமை இல்லாத கிராமமாக மாற்றவேண்டும். சமய நம்பிக்கையும் கடவுள் வழிபாட்டில் ஈடுபடுகின்றமையும் குறைவடைந்து வருகின்றது. இதற்கு தற்போதைய சமுகம் தொலைபேசி பாவனைக்கு கொடுக்கும் முக்கியத்துவமே காரணமாகும். தொலைபேசி பாவனையால் இருக்கும் இடத்தினை மறந்து இருக்கின்றோம்.  அறநெறி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் அறநெறிப்பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.