கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்த திராணிஇல்லாத தமிழத்தலைமைகளை இன்னுமா நம்புவது?

கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்த திராணிஇல்லாத தமிழத்தலைமைகளை
இன்னுமா நம்புவது?
தமிழ்த் தலைமைகளுக்கு சாணக்கியமுமில்லை திறமையுமில்லை!
ரணில் அரசாங்கத்தை பாதுகாத்த த.தே.கூட்டமைப்பினர் அதற்கு பிரதியுபகாரமாக
கிழக்குதமிழ்மக்களுக்கு எதனைச் செய்தார்கள்?
கல்முனையில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தலைவர் சட்டத்தரணி சிவநாதன் கேள்வி!
(காரைதீவு  நிருபர் சகா)

யுத்தம் மௌனித்த பின்னர் கடந்த பத்துவருடகாலமாக கிழக்குவாழ்
தமிழர்களுக்கு தமிழ்த்தலைமைகள் என்ன செய்தார்கள்? என்ன முயற்சி
எடுத்தார்கள்? என்பதை பகிரங்கமாக கூறட்டும். ரணிலைக்காப்பாற்றியமைக்கு
இந்த தமிழ்த்தலைமைகள் கிழக்குதமிழ் மக்களுக்கு பதிலுக்கு
பெற்றுக்கொடுத்ததென்ன?

இவ்வாறு கிழக்கு தமிழர் ஒன்றியத்தலைவர்;  சிரேஸ்ட சட்டத்தரணியும்
பதில்நீதிபதியுமான தட்சணாமூர்த்தி சிவநாதன் கல்முனையில்
இன்று ஞாயிற்றுக்கிழமை(24)உரையாற்றும்போது கேள்வியெழுப்பினார்.

கேவலம் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கைஎடுக்கத்
திராணிஇல்லாத தகுதியில்லாத தமிழ்த்தலைமைகளை இன்னுமா நம்புவது? என்றும்
காட்டமாகக் கேள்வியெழுப்பினார்.

கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் கல்முனைப்பிராந்திய நிருவாகக்குழுவைத்
தெரிவுசெய்வதற்கான பொதுக்கூட்டம் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்டத்தலைவர்
சிரேஸ்ட்ட பொறியியலாளர் ரி.சர்வானந்தா தலைமையில் இன்று (24)
ஞாயிற்றுக்கிழமை கல்முனை நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தலைமைகளுக்கு சாணக்கியமும் இல்லை தகுந்த திறமையும் இல்லை’ என்று
கூறிய தலைவர் த.சிவநாதன் மேலும் உரையாற்றுகையில்:

70வருடங்களாக தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகப்போராடினர். பின்னர்
கடந்த 30வருடங்களாக ஆயதப்போராட்டத்திலீடுபட்டனர்.அக்காலகட்டத்தில்
புலிகள் அரசியல் பற்றிப்பேச அனுமதிக்கவில்லை.ஒருவழிக்கு அதுசரி.

ஆனால் அந்த ஆயுதப்போராட்டம் 2009இல் மௌனித்தபின்பு தமிழ்மக்கள் மத்தியில்
நிறைய எதிர்பார்ப்புகள் பயங்கள் தேவைகள் எழுந்தன. நிலைமை தலைகீழாக மாறின.
போருக்குப்பின்னர் தொடர்ந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்கை தமிழ்மக்கள்
மாகாணத்திற்கும் வாழ பாராளுமன்றத்திற்கும் வாழ வாக்களித்து
அனுப்பிவைத்தார்கள். இதுவரைக்கும் அவர்கள் சாதித்தது என்ன?
இன்று தமிழ்மக்களின் அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்வது யார்?
தமிழ்த்தலைமைகளை எமது தமிழ்மக்கள் நிறைய நம்பியிருந்தனர்.ஆனால் அவர்கள்
ஏமாற்றிவிட்டார்கள்.
கடந்த 10வருடங்களாக தமிழ்த்தலைமைகள் எதைச்சாதித்தன? இந்த தமிழ்மக்களைத்
தொடர்ந்து கஸ்ட்டத்தில் இருக்கச்செய்துள்ளனர்.

தற்போது கிழக்கில் மற்றுமொரு சமுகத்தின் ஆதிக்கத்தின்கீழ்
திண்டாடவைத்துள்ளது.அவர்களுடன் ஈடுகொடுக்கமுடியுமா? இந்த நியாயமான
கேள்விக்கு அவர்கள் விடைகூறுவார்களா? முடியாது நாம்தான் அதற்கு
விடையிறுக்கவேண்டும்.

கிழக்கில் தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தனர். இந்த கல்முனை
எல்லைகளை அறிவோம். தற்போதுள்ள கல்முனை தமிழ்ப்பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த
முடியாத தமிழ்த்தலைமைகளை இன்னும் தொடர்ந்து நம்பலாமா?

நிதி காணி அதிகாரத்திற்கு இன்னுமொருவரிடம் கையேந்தவேண்hய நிலையிலுள்ள
கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தைத் தரமுயர்த்த தகுதியில்லாத
தமிழ்த்தலைமைகள் தொடர்ந்து இருக்கட்டும் என்றுகூறி கண்ணைமூடிக்கொண்டு
மௌனியாக இருப்பதா? அல்லது மாற்றுவழியைத் தேடுவதா?
அதற்காகவே கிழக்கு தமிழர் ஒன்றியம் கிழக்குவாழ் தமிழ்மக்களை
கட்சிஅரசியலுக்கு அப்பால் சாதிமதபேதமின்றி ஒன்றுதிரட்டிவருகிறது. அதற்காக
இது வடக்கிற்கு எதிரானதோ முஸ்லிம்களுக்கு எதிரானதோ அல்ல. வடக்குகிழக்கு
இணைந்ததாயகமே எமது இலக்கு.
கிழக்குவாழ் தமிழர்கள் ஒன்றுபடாவிட்டால் எதிர்காலம் சூனியமாகும். எந்தவித
சாத்தியமான நலனையும் பெறமுடியாது. சாதிக்கமுடியாது.

ஒற்றுமைப்பட்டு எமது இருப்பைக் காப்பாற்றுவது தொடர்பில் சிந்திக்கவேண்டும்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு காலம் காலமாக வாக்களித்துவந்தோம். அனால்
அவர்கள் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது வாக்களியுங்கள் என்றுகூறி
மக்களை தொடர்ந்து ஏமாற்றிவருகிறார்கள்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கும்
கதையைச் சொல்லப்போகிறார்கள்? தீர்வு வருகிறது என்று
காலத்தைக்கடத்துகிறார்கள்.
அனைத்தும் கைநழுவிப்போனதும் சர்வதேசம் அதனைப்பார்த்துக்கொள்ளும்
என்றுகூறி வாழாவிருப்பார்கள்.
தேர்தல்கள் காலத்தில் வந்து ஏமாற்றுகின்ற இந்தபோர்வழிகளை எமது
காலடிக்குக்கொண்டுவரவேண்டுமானால் மக்கள் ஒன்றுபடவேண்டும். அவர்கள் இவ்
ஒன்றியத்தை கவிழ்க்க சதிசெய்கிறார்கள்.

சர்வதேச நாடுகளின் கருணையை கட்டாயம் பெறவேண்டும். இந்தியஇலங்கை
ஒப்பந்ததமூலம் வடகிழக்கு மாகாணசபை வந்ததை நாமறிவோம். எனவே இலங்கையில்
தமிழ்மக்களுக்கு ஏதாவது விமோசனம் என்றால் இந்தியாவின் தலையீடு இல்லாமல்
ஒன்றுமே நடக்காது..
இந்தியாவின் காலடியில்வீழ்ந்திருந்தால் தமிழ்மக்களுக்கான தீர்வு ஓரளவாவது
எட்டப்பட்டிருக்கும். அதனைச்செய்தார்களா?
இதுவைர அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சாதித்தவைகளை பகிரங்கமாகச் சொல்லட்டும்.
வடக்கு கிழக்கை ஒரே சமன்பாட்டில் பார்க்கமுடியாது. வடக்கின்நிலை
வேறு.வடக்கில்  தேவையான அபிவிருத்தி  வேலைகள் ஆரம்பித்துள்ளன. இன்னும்
கோடிக்கணக்கில் கொட்டுகிறார்கள். அது  தேவையானதே. அப்படியெனின்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கை அபிவிருத்தி செய்வது யார்?
வடக்கில் போராட்டகாலத்திலும் மகேஸ்வரன் போன்ற அமைச்சர்கள் இருந்தார்கள்.
அபிவிருத்தி செய்தார்கள். ஆனால் கிழக்கில் அது முடிந்ததா? வடக்கை
வெறுப்பதாகச் சொல்லவில்லi. யதார்த்தத்தைக்கூறுகின்றேன்.எமக்கு
பின்புலத்தில் யாரும் இல்லை
ரணிலுக்கு முட்டுக்கொடுத்த தமிழ்த்தலைமைகளால் கிழக்கிற்கு
எதனைப்பெற்றுக்கொடுக்கமுடிந்தது? அவர்கள் தமது சுயநலத்திற்கு எதையாவது
பெற்றிருக்கலாம். ஆனால் தமிழ்மக்களுக்கு இவர்களால் எந்தப்பயனுமில்லை .

அரசியல் சாணக்கியம் என்கிறார்கள். அது உருவத்தில் வருவதுஇல்லை.
மண்டையைப்பயன்படுத்தவேண்டும். சாணக்கியம் வார்த்தையில் அல்ல செயலில்
வரவேண்டும்.
நாம் த.தே.கூட்டமைப்பிற்கு எதிரானவர்களல்ல. ஆனால் தொடர்ந்து ஏமாற்ற
இடமளிக்கமுடியாது. இவர்களை தொடர்ந்து தலைவர்களாக ஏற்றுக்கொள்வதா அல்லது
ஓரங்கட்டுவதா? என்பதை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

கிழக்கில் புதிய அரசியல்தலைமைகள் பாரமெடுக்கவேண்டும். காலாவதியாகிப்போன
சுயநலஅரசியல் தலைமைகளைக் களையவேண்டும்.

யார் யார் தலைவர்களாக வரவேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்?
அண்மையில் நான் மூதூர் வெருகல் பிரதேசத்திற்கு விஜயம்செய்தேன். மூதூரில்
22தமிழ் கிராமசேவையாளர் பிரிவுகளும் 19முஸ்லிம் கி.சே.பிரிவுகளுமுள்ளன.
ஆனால் மூதூர் பிரதேசசெயலகத்தில் ஒரு தமிழர்கூட கடமையில் இல்லைஅனைவரும்
மாற்றினத்தவர்களே.
அங்கு பூர்வீகமாக தமிழர்வாழ்ந்துவந்த காணியை ஒரு மாற்றினத்தவர்
அபகரித்துள்ளார். அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கஉத்தியோகத்தர்கள்
தொடக்கம் சம்பந்தர் வரை சென்றுள்ளனர் அந்த மக்கள். பார்க்கிறேன்
பார்க்கிறேன் என்றாராம் சம்பந்தர். ஆனால் ஒன்றுமே செய்யவில்வைலஇன்னமும்
பார்த்துக்கொண்டிரக்கிறார்.
மக்கள் இலழர நம்பாமல் பேராட்டத்திலீடுபட்டார்கள். விளைவாக இன்று அக்காணி
மீண்டும் உரியதமிழரிடம் வந்துள்ளது.
எனவே மக்கள் ஒன்றுபட்டால் சக்தி அதிகம்.இந்த கையாலாகாத தலைமைகளை
விரட்டமுடியும். விரட்டியே ஆகவேண்டும். எனக்கு அரசியலில் ஈடுபடவேண்டிய
தேவையே இல்வை. அரசியலுக்குவரப்போவதுமில்லை.

எனவே கிழக்குத்தமிழர்கள் தீர்க்கமாகச்சிந்தித்துச்செயற்பட்டால் தமது
இருப்பைத்தக்கவைத்துக்கொள்ளலாம் என்றார்.

கூட்டத்தில் கிழக்குதமிழர் ஒன்றியத்தின் செயலாளர் டாக்டர் கே.அருளாநந்தம்
பொருளாளர் கே.மகேந்திரநாதன் உள்ளிட்ட பல முக்கியபிரமுகர்களும்
கலந்துகொண்டனர்.
கல்முனைப்பிராந்தியத்தைச்சேர்ந்த பெரியநீலாவணை பாண்டிருப்பு கல்முனை
நற்பிட்டிமுனை மணற்சேனை சேனைக்குடியிருப்பு துரைவந்தியமேடு ஆகிய
கிராமங்களைச்சேர்ந்த பொது பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். புதிய
நிருவாகக்குழுவும் தெரிவானது.