மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்தச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (22) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டடில் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது இதில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புத்திஜீவிகள் மற்றும் மதகுருமார்கள் நடைமுறையிலே உள்ள குற்றவியல் சட்டம் போதுமானது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம்.

பாராளுமன்ற உறுப்பினர்களே நாட்டின் பாதுகாப்பு என்று ஜனநாயகத்தை விற்றுவிடாதீர்கள், ஆயிரக்கணக்கான சித்திரைவதைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் வரலாற்று தவறுகள் சிரிஏ யின் கீழ் தொடரும், இராணுவ அரசு எமக்கு வேண்டாம், தேவையற்ற கைது சித்திரவதை, பொலிஸ் இராணுவ அதிகாரம் இதுதான் சி ரி ஏ, போன்ற சுலோகங்கள் ஏந்தி கோஷம் எழுப்பியவாறு சுமார் 2 மணித்தியாலங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இதில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ஆர்.வசந்தராஜா கருத்து தெரிவிக்கையில்,

1979 ம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத சட்டம் தற்காலிகமாக கொண்டுவரப்பட்டது அது பின்னர் 1982ம் ஆண்டு இது நிரந்தரமான சட்டமாக்கப்பட்டு இன்றுவரையும் அந்த சட்டம் அமுலில் இருந்து வருகின்றது. பொதுமக்கள் சர்வதேசம் யாவரும் இந்த சட்டத்தை எதிர்த்துக் கொண்டுள்ள நிலையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் நீக்கப்பட்டதாக இல்லை.

இந்த சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு மூன்று மாதகாலத்துக்கு தடுத்து வைக்கப்பட்டதோடு சம்மந்தப்பட்ட அமைச்சு சிபார்சு செய்யும்வரை 18 மாதம்வரை இந்த தடுப்பு நீடிக்கும் அதேவேளை நீதிமன்றத்தையே சவால் விடும் இந்த சட்டம்.

இன்று இந்த சட்டத்தினூடாக மனித உரிமைகள் மீறப்படுகின்றன, மனித உரிமையை மீறுகின்றவர்களை காப்பாற்றும் இந்த சட்டம். சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக இந்த சட்டத்தை நீக்கவேண்டும் என்று சொல்லுகின்ற இந்த சந்தர்ப்பத்திலே பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவருவதற்காக இலங்கை அரசாங்கம் முயன்று கொண்டுள்ள நிலையில் மக்கள் விரும்பவில்லை எனவே மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்காரவாத தடைச் சட்டம் இரண்டும் வேண்டாம் என தெரிவித்தார்.