சிறுபோக செய்கை- ஆரம்பக்கூட்ட தினங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை, மார்ச் 01ம் திகதி முதல் 08ஆம் திகதிக்குள் நடத்தி முடிப்பதென, மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் நேற்று (18) நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வை.பி.இக்பால், விவசாய பணிப்பாளர்(விரிவாக்கம், கே.பேரின்பராஜா, கமநல சேவைகள் மாவட்ட உதவிப்பணிப்பாளர், நீர்ப்பாசனப் பணிப்பாளர் (மத்தி) பொறியியலாளர் எஸ்.எம்.பி.எம்.அஸார் , நீர்ப்பாசனப்பணிப்பாளர் (மாகாணம்), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளிட்டோர் பங்கு கொண்டதுடன், விவசாயிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இத்தீர்மானத்தின்படி, சிறுபோகத்துக்கான ஆரம்பக் கூட்டங்கள் –

மண்முனை மேற்கு உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், வவுணதீவு பிரதேச செயலகத்தில் மார்ச் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்கு, ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள உறுகாமம், கித்துள்வெவ, வெலிகாகண்டி, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம், செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

போரதீவுப்பற்று – நவகிரி, தும்பங்கேணி, சிறு நீர்ப்பாசனத் திட்டங்கள் – வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் மார்ச் 02ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு, மண்முனை தென்மேற்கு – கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்ச கல், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கோரளைப்பற்று வடக்கு – கட்டுமுறிவு நீர்ப்பாசனம், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம், வாகரைப்பிரதேச செயலகத்தில் மார்ச் 08ஆம் திகதி காலை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு, கோரளைப்பற்று தெற்கு வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், கிரான் கோரகல்லிமடு ரெஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.