நான்கு ஆலயங்களில் பொருட்களை திருடிய சந்தேக நபர் கைது

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நான்கு ஆலயங்களில் பொருட்களை திருடிய சந்தேக நபர் ஒருவரை சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.டி.நாகரத்தின தெரிவித்தார்.
கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலயம், விநாயகபுரம் நாகதம்பிரான் ஆலயம், மருதநகர் சிவமுத்துமாரியம்மன்  ஆலயம், மருதநகர் சித்தி விநாயகர் ஆலயம் என்பவற்றின் வாயில் கதவினை உடைத்து உற்சவத்திற்கு பயன்படுத்தும் பெறுமதி வாய்ந்த பொருட்கள்  சில திருடப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸில் ஆலய நிருவாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் மென்டிஸின் பணிப்புரைக்கமைய வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பாறுக் வழிகாட்டலில் கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.டி.நாகரத்தின தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றது.
இதன்போது விநாயகபுரத்தினை சேர்ந்த குறித்த சந்தேக நபரினை குற்றபுலானாய்வு பொறுப்பதிகாரி டி.பி.கே.விஜயந்த மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஆர்.கிருஸ்ணமூர்த்தி, ஜே.எல்.சதுரங்க, ஜே.கே.சிலக்சிறி, எஸ்.செனவிரத்ன ஆகியோர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 26 சிலம்புகள் மாத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர் கல்குடாப் பகுதியில் பல திருட்டு சம்பங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவார்.
மேலும் விளக்குகள், பூசை வட்டா, தீபம் உட்பட்ட ஆராதனை பொருட்கள் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட மீதிப் பொருட்களையும், இன்னும் சந்தேக நபர்கள் உள்ளனரா என்ற விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.டி.நாகரத்தின மேலும் தெரிவித்தார்.