பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்…

பயங்கரவாதத் தடைச் சட்டமும் வேண்டாம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் வேண்டாம் நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்டங்களே போதுமானவை எனும் தொனிப்பொருளிலான பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக கொணரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் பாதக தன்மைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மட்டக்களப்பு அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் அமைப்பின் தலைவர் ச.சிவயோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் பல்சமய ஒன்றியம் உட்பட மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதிமுதல்வர் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சர்வமதப் பிரதிநிதிகள், சமுக செயற்பாட்டாளர் ருக்கி பெனான்டோ, இணைச் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் இணையம் அமைப்பினால் பல்வேறு தரப்பினருடன் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் சர்வமதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களுடனான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு தற்போது உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுடன் இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பாதகநிலைமைகள் பல தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் உள்ளுராட்சி மன்றங்களில் இப்பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பிலான பிரேரணை கொண்டுவரப்பட்டு அச்சட்டத்தை எதிர்ப்பதற்கான வெளிப்படுத்தல்கள் பகிரங்கமாக சர்வதேசத்திற்கும் எமது நாட்டு அரசுக்கும் தெரியப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என ஏற்பாட்டுக் குழவினால் வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இச்சட்டத்தின் பாதக தன்மைகளை உணர்ந்து இதனை நிராகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து சபைகளினூடாகவும் மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக அனைத்து சபைகளில் சார்பில் தெரிவிப்பதாக இதன் போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.