மீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சகல வசதிகளையும் கொண்ட நான்கு மாடிக்கட்டிடம் அமையப்பெறவுள்ளது.
வைத்தியசாலை பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் தொடர் முயற்சியின் பயனாக இக்கட்டிடம் அமையப்பெறவுள்ளது.
இதற்கான பூரண சகல ஏற்பாடுகளும் நிருவாக மட்டத்தில் நிறைவு பெற்றுள்ளன. இதற்காக இரவுபகல் பராது பெறும் அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் இவ்வேலைகள் நிறைவு பெறுவதற்கு அபிவிருத்திக் குழுவினரின் செயற்பாடுகளே காரணமாக அமைந்தது.
அதன் இறுதி செயற்பாடுகளை நிறைவு செய்து, திட்டத்தினை அமுல்ப்படுத்துவதற்காக கட்டிட திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் குழு 2019.02.13ஆம் திகதி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு கட்டிடம் அமையப்பெறவுள்ள இடத்தினை பார்வையிட்டதுடன், வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா அவர்களிடம் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.
வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சுகாதார இராஜாங்க அமைச்சரை 2017.07.23ஆம் திகதி நிந்தவூர் காரியாலயத்தில் வைத்து ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
அதன் தொடரில், அன்றைய தினம் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு வைத்தியசாலைக்கு வருகைதந்த இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையின் நிலைமைகளை நேரில் பார்த்து கண்டறிந்து கொண்டார்.
இதன்பயனாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரிடம் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் பற்றாக்குறை, புதிய அம்பியுலன்ஸ் வண்டி மற்றும் கட்டிடம் ஆகியவற்றை பெற்றுத்தருவதாக  வாக்குறுதியளித்திருந்தார்.