செயலணிக்குழுவின் அனுமதி கிடைத்ததும் பொத்துவில் கனகர்கிராம மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்படும்!

பொத்துவில் கனகர்கிராம தமிழ்மக்களின் காணிகள் தொடர்பான சகல அறிக்கைகளும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடாக ஜனாதிபதி செயலணிக்குழுவிற்கு (PRESIDENT TASK FORCE) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழுவின் அனுமதி கிடைத்ததும் அந்த மக்களுக்கான காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

இவ்வாறு பொத்துவில் பிரதேசசெயலாளர் எம்.எ.சி.அப்துல் நசீர் தெரிவித்தார்.

கடந்த 180நாட்களாகப் போராட்டத்திலீடுபட்டவரும் பொத்துவில் 60ஆம் கட்டை கனகர்கிராம தமிழ்மக்களின் காணிபகிர்ந்தளிப்பு தொடர்பாக எமது ஊடகவியலாளர் சகா பிரதேச செயலாளரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

180நாட்களாக போராடிவரும் அந்தக்கொட்டிலில் இருந்து தொடர்புகொண்டு
கேட்டபோது  பிரதேசசெயலாளர் நசீர் தெரிவித்த சாதகமான பதில் அந்தமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதஅபிவிருத்தித் தாபன கிழக்குமாகாண இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த் முன்னிலையில் இத்தொடர்பாடல் இடம்பெற்றிருந்தது.

அவ்வமயம் பிரதேசசெயலாளர் நசீர் மேலும் கூறுகையில்:

குறித்த மக்களின் காணிகள் தொடர்பாக அவர்களிடமிருந்து பெற்ற
ஆவணங்களைக்கொண்டு நேர்முகப்பரீட்சைகளை நடாத்தினோம். அதில்
202குடும்பங்கள் அளவில் தெரிவாகியுள்ளனர்.

குறிப்பாக ஏலவே வீடமைப்புத்திட்டத்தில் வசித்த 30குடும்பங்களுக்கு
தேசியவீடமைப்புஅதிகாரசபையூடாக வீடமைப்புத்திட்டமொன்றை
ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டமுள்ளது.
இன்னும் 62குடும்பங்கள் உரியஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளதனால் அவர்கள்
தெரிவாகியுள்ளனர். இதைவிட சத்தியக்கடதாசி மூலம் ஏற்றுக்கொள்ளதக்க குறைந்த
பட்ச ஆவணங்களுடன் தோற்றிய 110குடும்பங்களும் தெரிவாகியுள்ளன.

நேர்முகப்பரீட்சைகளில் தெரிவானவர்களின் பெயர்ப்பட்டியல் அம்பாறை மாவட்ட
அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சிலர் தாம் அப்பட்டியலில் விடுபட்டுள்ளதாகக்கூறி மேன்முறையீடு செய்தனர்.
பலகுடும்பங்கள் பிள்ளை பேரப்பிள்ளை என விரிவடைந்துள்ளன. அவர்களும்
விண்ணப்பித்துள்ளனர்.
அரச அதிபரின் அனுமதியுடன் அவர்களுக்கும் நேர்முப்பரீட்சைவைக்கப்பட்டு
அந்தப்பட்டியலும் ஜனாதிபதி விசேட செயலணிக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவர்களது காணியை அளவிட்டுப் பகிர்ந்தளிப்து பற்றி
நிலஅளவைத்திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் அரசஅதிபரால் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அளவிடலுக்கான மதிப்பீடு செலவு நிதி பற்றி மதிப்பிடப்பட்டு
அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அங்கீகாரமும் ஒதுக்கீடும்
கிடைக்கும்பட்சத்தில் அப்பணி தொடங்கும்.

அரசஅதிபரின் அனுமதிக்கிணங்க இந்த மக்களுக்கு சுமார் 250ஏக்கர் காணி
பகிர்ந்தளிக்கபடவுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1ஏக்கர் 20பேர்ச்சஸ்
காணி வழங்கப்படலாமெனத் தெரிகிறது.
வனபரிபால இலாகா இக்காணியை எல்லையிட்டு இன்னமும் வழங்கவில்லை. இப்பகுதி
துப்பரவாக்கப்பட்டதும் அப்பணியும் இடம்பெறும்.

எதுஎப்படியிருந்தபோதிலும் ஜனாதிபதி செயலணிக்குழுவின் அனுமதிகிடைத்ததும்
காணிபகிர்ந்தளிக்கப்படவிருக்கின்ற அதேசமயம் உள்ளக வீதிகளுடன் நவீன
வீடமைப்புத்திட்டமொன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

காலாகாலமாக கனகர்கிராமத்தில் வாழ்ந்துவந்த அந்த மக்கள்
போராட்டத்திலீடுபட்டுவரும் இவ்வேளை எமது நடவடிக்கைகளை நாம் விரைவாக
முன்னெடுத்துவருகின்றோம். எனவே விரைவில் அவர்களுக்கான தீர்வு
கிடைக்கலாமென நம்புகிறேன். என்றார்.