180வது நாளாக போராடும் பொத்துவில் தமிழ் மக்கள்

நாம் வாழ்ந்த காணியையே தாருங்கள்! 100வீதநம்பிக்கையுடன் இருக்கின்றோம்! 
180வது நாளாகப்போராடும் பொத்துவில் தமிழ்மக்கள் எச்டிஓவிடம்  கோரிக்கை!
(காரைதீவு  நிருபர் சகா)
நாம் பூர்வீகமாக வாழ்ந்துவந்த காணியையே கோருகின்றோம். தவிர மாற்றான் காணியை அல்ல.எமது காணியைத்தாருங்கள். வேறொன்றும் தேவையில்லை.கிடைக்குமென்ற 100வீத நம்பிக்கையுடனிருக்கிறோம். சாவது என்றாலும் இந்த இடத்திலேயே சாவோம்.

 
இவ்வாறு நேற்று(13) புதன்கிழமை 180வது நாளாகப் போராட்டத்திலீடுபட்டுவரும்  பொத்துவில் கனகர் கிராம தமிழ்மக்கள் தம்மைச்சந்தித்த மனித அபிவிருத்தித்தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்திடம் வேண்டுகோள்விடுத்தனர்.
 
நேற்று(13) மனித அபிவிருத்தித்தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த உதவிஇணைப்பாளர் எம்.ஜ.றியால் களஉத்தியோகத்தர்களான எஸ்.தர்சிகா எஸ்.மனோரஞ்சினி வி.ஜனார்த்தனன் ஆகியோர் அங்கு விஜயம்செய்திருந்தனர்.
 
சமகால நிலைவரம் தொடர்பாக அவர்களிடம்  சகலவிடயங்களையும் அறிந்த பின்னர் இணைப்பாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில்:
 
180நாட்களைத்தாண்டி இந்த மக்களின் நியாயமான போராட்டம் தொடர்வது கவலைக்குரியது. எனினும் பொத்துவில் பிரதேச செயலாளர் அதற்கான நடவடிக்கையை நிதானமாக எடுத்துக்கொண்டிருப்பதையிட்டு மிகழ்ச்சியடைகிறோம்.
 
எனினும் இதுதொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிக்கைசெய்யவிருக்கிறோம். 
அந்த மக்கள் காலகாலமாக வாழ்ந்துவந்த நிலத்தை மீளஒப்படைப்பதில் இத்துணை தாமதம் காட்டப்பட்டுவருவதையிட்டு கவலையடையவேண்டியுள்ளது. என்றார்.
 
 
அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் ஊறணி எனுமிடத்தில்; கனகர்கிராம தமிழ்மக்களின் காணிமீட்புப்போராட்டம் தொடங்கி நேற்றுடன் 180வது நாளாகிறது.
 
இற்றைக்கு 58வருடங்களுக்கு முன்பு வாழ்ந்துவந்த தமது காணிகளைக்கோரி அந்த மக்கள் போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர். 1960களில் சுமார் 278குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. 1981களில் முன்னாள்  பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாhரின் காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர்செய்ய 2ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30வீடுகளைக்கட்டி கொடுக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியாக சேனைப்பயிர்ச்செய்கையுடன் வாழ்ந்துவந்தனர்.
 
1990களில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 28வருடங்களாக அங்கு  வனபரிபாலனஇலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.
 
எது எப்படியிருந்தபோதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக்காணப்படுகின்றது.  அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்தநிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன. 
 
 
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளைம்  அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் தொடர்கிறது.