முள்ளிவட்டவான் பகுதி மக்களால் மணல் அகழ்வை நிறுத்தக்கோரி மக்கள் ஆா்ப்பாட்டம்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புனானை மேற்கு முள்ளிவட்டவான் பகுதி மக்களால் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை (13.02.2019) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கிரான் புலிபாய்ந்த கல் வீதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது ஊர்வலமாக கிரான் பிரதேச செயலகத்தினை சென்றடைந்தது.

முள்ளிவட்டவான் ஆற்றில்  சட்டவிரோமான முறையில் மண் அகழ்வதால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதுடன், வீதிகள் குண்டும்குழியுமாக காணப்படுவதாகவும் இதனால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தூசு படிவதனால் குடிநீர் மாசுபடுவதாகவும் தெரிவித்து குறித்த போராட்டம் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவட்டவான் கிராமத்தில் 45 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் ஜீவனோபாய தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இவ்விடத்தில் மண் அகழ்வதை நிறுத்துமாறு தெரிவிக்கும் போது மண் அகழ்பவர்கள் அடிக்க வருவதாகவும், தகாதவார்த்தைகளைக் கூறி அச்சுறுத்துகின்றனர் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே மணலை  உழவு இயந்திரங்களில் ஏற்றிக்கொண்டடு வீதியில் வேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதுடன், பாடசாலை செல்லும் மாணவர்களின் சீருடைகள் தூசுகளால் மாசடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்ட  பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்துசென்றனர்.