கல்வியினை தடைசெய்யும் உரிமை பெற்றோருக்கும் இல்லை

  கஷ்ரப்பிரதேச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் வெறும் சேவையாக கருதாமல் அற்பணிப்போது தங்களது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் அப்பிரதேச மாணவர்களினதும் சமூகத்தினதும் மனங்களை வென்றவர்களாக நீங்கள் வெளியேற வேண்டும். எனபதே எனது விருப்பமாகும் என பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் அவர்கள் தெரிவித்தார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்;ட சின்னவத்தை அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி அதிபர் எஸ்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பிரதி கல்விப் பணிப்பாளர் அஸ்லம், கோட்டக்கல்விப் பணிப்பாளர், அருள்ராசா, உதவிக் கல்வி  பணிப்பாளர்களான இதயகுமார், நேசகஜேந்திரன், சுரேஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
எமது கல்வி வலயத்திற்கு உட்பட்ட எல்லைப்புற பாடசாலையான இப்பாடசாலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் விளையாட்டுப் போட்டியினை ஒழுங்கு செய்து அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்று நடாத்துகின்றமையிட்டு நான் பெருமையடைகின்றேன். காரணம் இந்தப்பகுதி மாணவர்கள் மிகவும் தங்களது இணைப்பாடவிதான செயற்பாடுகளில் வலயம் மாகாண ரீதியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும். இத்திறமைகளை இனங்கொண்டு கொள்வதற்கு இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகள் களம் அமைத்துக் கொடுக்கின்றது. அதுமாத்திரமல்ல அவர்கள் இவ்விளையாட்டுகளில் பங்குபற்றுவதன் ஊடாக தங்களின் உடல் உள ரீதியான தகைமைகளை பெற்று எதிர்கால சவால்களுக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுப்பதற்கு இவ்வாறான நிகழ்வுகள் உந்துசக்தியாக இருக்கின்றது.
இந்த பாடசாலையில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைவான மாணவர்களே கல்வி கற்கின்றனர். இந்த மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கு ஆசிரியர்கள் தங்களாலான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும். காரணம் இந்த மாணவர்களின் பெறுபேறுகளில் பின்தங்கியிருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. தற்பொழுது புதிய அதிபர் அவர்கள் அனைத்து செய்பாடுகளிலும் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். அவரிடம் இதற்கான திட்டங்களும் நல்ல சிந்தனைகளும் அவரிடம் இருப்பதனை என்னால் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அவர் இந்த பாடசாலையை மாணவர்கள் விரும்பிவருகின்ற பாடசாலையாக மாற்றியமைப்பதற்குரிய செயற்பாடுகளும் அவரிடம் காணப்படுகின்றது. இதற்காக அவரை பாராட்டுகின்றேன். அதற்கு ஆசிரியர்கள் தங்களது கூடுதலான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.
இப்பாடசாலையை பொறுத்தளவில் மாணவர்கனின் கல்வியின் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்கின்ற பொழுது  காட்டு யானைகளின் தொல்லை, கூடுதலான மாணவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகம் கொடுக்காமை போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு ஒழுங்காக அனுப்பிவைப்பது பெற்றோரின் கடமையாகும். ஒரு மாணவன் தொடர்ச்சியான கற்றலின் ஊடாகவே தேர்ச்சிடைய முடியும். எனவே அன்பான பெற்றோர்களே உங்களது பிள்ளைகளின் கல்வியில் நீங்கள் கூடுதலான கவனத்தை செலுத்த வேண்டும். ஒரு பிள்ளையின கல்வியினை தடைசெய்யும்   உரிமை பெற்றோருக்கும் இல்லை என்பதனை நீங்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான ஆசிரியர்கள் கஷ்ர பிரதேசப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு விரும்புவது சற்று குறைவாகவே உள்ளது.  நகரப்புற பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களை மாணவர்கள் மறந்துவிடுவார்கள் ஆனால் பின்தங்கிய பிரதேசத்தில் கற்பிக்கின்ற ஆசியர்களை மாணவர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் அவர்களின் செயற்பாட்டுக்கு உங்களின் பங்களிப்பு இன்றியமையாதாக காணப்படுகின்றது. கஷ்ரப்பிரதேச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் வெறும் சேவையாக கருதாமல் அற்பணிப்போது தங்களது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் இப்பிரதேச மாணவர்களினதும் சமூகத்தினதும் மனங்களை வென்றவர்களாக நீங்கள் வெளியேற வேண்டும் எனபதே எனது விருப்பமாகும். என அவர் இதன்போது தெரிவித்தார்…