மண்முனை வீதி, அம்பிளாந்துறை படகுச்சேவை சீரின்மைக்கான முழுப்பொறுப்பினையும் வீதி அபிவிருத்தி திணைக்களமே கூறவேண்டும்.

மண்முனை வீதி, அம்பிளாந்துறை படகுச்சேவை சீரின்மைக்கான முழுப்பொறுப்பினையும் வீதி அபிவிருத்தி திணைக்களமே கூறவேண்டும் என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச தினக்கூட்டம் இன்று(12) செவ்வாய்க்கிழமை செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே, பிரதேச செயலாளர் இதனைக்குறிப்பிட்டார்.

பிரதேச செயலாளர் தொடர்ந்தும் கூறுகையில்,
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மண்முனைத்துறை வீதியானது போக்குவரத்து செய்யமுடியாத வகையில், காணப்படுகின்றது. இதனால் அன்றாடம் போக்குவரத்துச் செய்கின்றவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு கிடைத்திருக்கின்றன. அதேபோன்று குருக்கள்மடத்திற்கும், அம்பிளாந்துறைக்குமான போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகும் சீரற்று காணப்படுவதாக மக்கள் எம்மிடம் கூறிவருகின்றனர். இவையிரண்டுமே வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழே உள்ளன. இதனை சீர்செய்வது, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணியேயாகும். இவ்விரண்டு போக்குவரத்து பாதைகளும் சீரின்மையாக காணப்படுவதற்கான முழுப்பொறுப்பினையும் வீதி அபிவிருத்தி திணைக்களமே கூறவேண்டும். இச்சேவைகளை திருப்திகரமாக செய்யமுடியாதெனின் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு பொறுப்பளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

குறித்த தினக்கூட்டத்தில் திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்ததுடன், புதிதாக கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, குறித்த காவல்நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில், நேர்மையாகவும், எவ்வித சட்டவிரோத செயற்பாடுகள் பிரதேசத்தில் இடம்பெறாத வகையிலும் தமது பணிகளை முன்னெடுப்பதாகவும், தமது ஒத்துழைப்பினை பூரணமாக வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

மண்முனை துறை வீதியானது கடந்த சில காலங்களாக போக்குவரத்து செய்யமுடியாத நிலையில், குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் அன்றாடம் போக்குவரத்து செய்கின்ற மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவருவதுடன், மகிழடித்தீவு வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்புக்கு நோயாளிகளை ஏற்றிச்செல்லும் காவுவண்டியும் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பில் மக்கள் குறிப்பிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலே உள்ளது. இது தொடர்பில், அண்மையில் நடைபெற்ற மண்முனை தென்மேற்கு பிரதேச சபை அமர்விலும், குறித்த வீதியினை திருத்தும் வரை கனரக வாகனங்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தல் கூடாதென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும் தொடர்ச்சியாக இவ்வீதி சீர்படுத்தபடாமலே உள்ளது. இந்நிலையிலேயே, பிரதேச தினக்கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.