உங்களிடம் கும்பிட்டு வணக்கம் ஜயா என்றுதானா பேசவேண்டும்.காரைதீவு பிரதேசபை அமர்வில்

(காரைதீவு  நிருபர் சகா)
 
சபையில் தவிசாளருக்கு எதிராகக் கைநீட்டிப் பேசியதோடு கேவலமான வார்த்தைகளைப் பிரயோகித்ததனால் சபையையும் இந்துமதத்தையும் கொச்சைப்படுத்தி அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் உபதவிசாளருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபைஉறுப்பினர் எ.ஆர்.எம்.பஸ்மீர் எழுத்துமூலம் சமர்ப்பித்த கோரிக்கை வெற்றியளித்தது.

 
இச்சம்பவம் நேற்று(11) திங்கட்கிழமை காரைதீவு பிரதேசசபையின் 12வது அமர்வில் இடம்பெற்றது. 
இவ்வமமர்வு தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் சபாமண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
 
அச்சமயம் உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் ‘எமக்கும் ஊடகசுதந்திரமுண்டு கருத்துச்சுதந்திரமுண்டு. பிரேரணைகள் 4நாட்களுக்கு முன் தந்திருக்கவேண்டும். உங்களிடம் கும்பிட்டு வணக்கம் ஜயா என்றுதானா பேசவேண்டும். நான் வெளியேறுகிறேன். எல்லோரும் எழும்புங்கள் ‘என்றுகூறி மேசையில் தட்டியவண்ணம் வெளியேறினார். வெளிநடப்புச் செய்தார்.
 
அதன்போது அ.இ.ம.காங்கிரஸ் உறுப்பினர் எ.ஜலீல் உரையாற்றுகையில்:
 
‘ஊடகத்தில் புகழ்தேடவேண்டும் மக்களிடம் படம்காட்டவேண்டும் விளம்பரம் வேண்டும் என்பதற்காக தவிசாளரின் அனுமதியின்றி ஊடகவியலாளரொவரையும் பார்வையாளரையும் அழைத்துவந்தது மட்டுமல்லாமல் சபைமீதும் தவிசாளர் மீதும் அபாண்டமான பழியைச்சுமத்தியுள்ளார் உபதவிசாளர். கேவலமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்  தவிசாளருக்கு எதிராக கைநீட்டிப்பேசினார். சமயத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். அதுதவறு. கடந்த 11அமர்வுகளிலும் எதிர்த்துப்பேசி சபையைக்குழப்பினார் . இன்று அவமதித்தார்.
5நாட்களுக்கு முன் எமக்கு பிரேரணை கிடைத்தது. அதில் தவறில்லை.இங்கு எந்த ஊழலோ முறைகேடோ இல்லை. இங்கு 12உறுப்பினர்களுக்கும் சமபங்கீடு. எதிலும் நீதிநியாயம். நிலைமை இப்படியிருக்கையில் படம்காட்டுவதற்காக நடிக்கிறார்கள். சபையைஅவமதித்துள்ளார் என்றார்.
 
அதனையடுத்து ஏற்பட்ட அமளிதுமளியின்போது உறுப்பினர் பஸ்மீர் ‘இப்படி சபையை  கொச்சைப்படுத்தி அவமதித்த உபதவிசாளருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் ‘எனக் கேட்டுக்கொண்டார்.
 
அதனை த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சி.ஜெயராணி வழிமொழிந்தார். யாருக்காவது இதுவிடயத்தில் எதிர்ப்பு இருக்கிறதா? என தவிசாளர் கி.ஜெயசிறில் வினவியபோது காரைதீவு சுயேச்சைக்குழு உறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம் ஆம் உபதவிசாளர்மீது நடவடிக்கைஎடுக்கக்கூடாது எனவே நான் எதிர்ப்புத்தெரிவிக்கிறேன். என்றார்.
 
அதனால் இதனை தவிசாளர் வாக்கெடுப்பிற்கு விட்டார். அப்போது ஒழுக்காற்று சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவாக 5வாக்குகளும் எதிராக 4வாக்குகளும் நடுநிலையாக 1வாக்கும் அளிக்கப்பட்டன.
 
வாக்கெடுப்பில் உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில் ஆ.பூபாலரெத்தினம் மு.காண்டீபன் எம்.றனீஸ் ஆகியோர் எதிர்த்துவாக்களித்தனர்.
 
வாக்கெடுப்பு வெற்றிபெற்றதையடுத்து உபதவிசாளரை ஒருமாதகாலத்திற்கு சபை நடவடிக்கையில் பங்கேற்ற தடைவிதிக்கலாம் என தவிசாளர் கூறியதுடன்இதுவிடயத்தை சட்டப்படி நிறைவேற்ற அடுத்த அமர்வில் பிரேரணையாக கொண்டுவருமாறும் பணித்தார்.
 
அதன்படி உபதவிசாளருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற விடயத்தை கிழக்கு ஆளுநர் உள்ளுராட்சி அமைச்சு உள்ளுராட்சிஆணையாளர் மாகாணஉள்ளுராட்சிஆணையாளர் அம்பாறை உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு சட்டப்படி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு தவிசாளர் ஜெயசிறில் செயலாளர் அ.சுந்தரகுமாரைப் பணித்தார்.