அம்பிளாந்துறை வாவி போக்குவரத்திற்கு தீர்வை வழங்குங்கள் – மக்கள் கோரிக்கை

மட்டக்களப்பு, அம்பிளாந்துறை – குருக்கள்மடம் இயந்திரச்படகுச்சேவையின் படகு சேதமடைந்துள்ளமையினால் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக குறிப்பிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரையையும், படுவான்கரையையும் பிரிக்கும் வகையில் நீண்ட ஆறு ஊடறுத்துச்செல்கின்றது.

இவ்வாற்றினைக்கடந்தே எழுவான்கரைக்கும், படுவான்கரைக்குமான தொடர்பினை ஏற்படுத்த முடியும். இதனை தொடர்புபடுத்தும் வகையில், பட்டிருப்பு, மண்முனை, வலையிறவு போன்ற பாலங்கள் அமைந்துள்ளன. அத்தோடு இவ்வாவியினை ஊடறுத்துச் செல்லும் வகையில் சில இடங்களில் இயந்திரப்படகுச்சேவையும் நடைபெற்றுவருகின்றது. இதன்மூலமாக மக்கள் தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பிளாந்துறையையும், குருக்கள்மடத்தினையும் இணைக்கும் வகையில், வாவியின் ஊடாக இயந்திரப்படகுச்சேவை பல காலங்களாக செய்யப்பட்டு வருகின்றதாகவும், தற்போதைய நிலையில் குறித்த படகுசேதமடைந்துள்ளமையினால் போக்குவரத்து செய்வதில் பயணிகள் இடர்களை சந்தித்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

படகு சேதமடைந்து ஓட்டையாக காணப்படுவதாகவும், இதனால் நீரினை இறைத்து, இறைத்தே போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். அம்பிளாந்துறை வாவி போக்குவரத்துக்கு பயன்படும் படகு பல வருடங்களுக்கு முன் வழங்கப்பட்டதாகவும், அதில்பல தடவைகள் திருத்தவேலைகள் செய்யப்பட்டும்; மிகவும் மோசமான நிலையிலே காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இப்படகின் மூலமாக பலதரப்பினரும் பயணம் செய்கின்றனர். அதேவேளை, வேலைக்கு செல்கின்றவர்கள் நேரத்திற்கு செல்ல முடியாமை, அச்சத்தின் மத்தியில் பயணிக்கின்றமை, உபாதைகள் ஏற்படக்காரணமாக அமைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தற்போது இடம்பெறுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதேவேளை உரிய படகினை சீர்செய்து தமது போக்குவரத்திற்கேற்றால்போல் அமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.