காத்தான்குடியில் ஆயுதங்களுடன் ஆளுநரை வரவேற்ற மாணவர்கள் .சிறப்பாக நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89வது வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை முதல்வர் எஸ்.எச்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.உமர் மௌலானா, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எச்.எம்.அஸ்பர், காத்தாக்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பதூர்தீன், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான முஹம்மது பரீட், முஹம்மது பௌமி, பிரதேச பாடசாலை அதிபர்கள், காத்தான்குடி கல்விமான்கள், உலமாக்கள், காத்தான்குடி மத்திய கல்லூரியன் பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை உடற்கல்வி தலைமை ஆசிரியர் வி.மோகனக்குமார் தலைமையில் துப்பாக்கி சத்தத்துடன் பாடசாலை மாணவர்களின் மைதான ஓட்ட நிகழ்ச்சிகள் யாவும் இடம்பெற்றதுடன், மாணவர்களின் அணி நடை கண்காட்சி, ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றது.

அத்தோடு பாடசாலையில் முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மாணவ சிப்பாய் படையணி மூலம் பொறுப்பாளர் மாணவன் சாஜன் எம்.ராசிக் தலைமையிலான குழுவினரால் அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.

மேலும் பாடசாலை மாணவர்களின் கராத்தே கண்காட்சி மற்றும் மாணவ சிப்பாய் படையணி ஆகியவற்றை காண்பதற்காக பெருந்திரளான மக்கள் மைதானத்தில் சூழ்ந்து கொண்டிருந்தனர்.

பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் 259 புள்ளிகளைப் பெற்று ஒமர் இல்லம் (பச்சை) முதலாம் இடத்தினையும், 205 புள்ளிகளைப் பெற்று றூமி இல்லம் (சிவப்பு) இரண்டாம் இடத்தினையும், 143 புள்ளிகளைப் பெற்று இக்பால் இல்லம் (நீலம்) மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.

இதன்போது வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் இல்லங்களுக்கு வெற்றிக் கிண்ணமும், மரதன் ஓட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவனுக்கு ஐயாயிரம் ரூபாவும், இரண்டாம் இடத்தினை பெற்ற மாணவனுக்கு மூவாயிரம் ரூபாவும், மூன்றாம் இடத்தினை பெற்ற மாணவனுக்கு இரண்டாயிரம் ரூபாவும் மற்றும் ஏழு பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதமும் வழங்கி வைக்கப்பட்டது.