ரணில் விக்கிரமசிங்க சிறுபான்னமயினருக்கு அளித்த வாக்குறுதிகளுக்காகவே இன்னும் போராடுகின்றார்.

தமிழர்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நாங்கள் வடக்கு- கிழக்கில் ஒற்றுமையாக வாழவேண்டும். மேலும் இம்மண்ணிற்காக போராடியவர்கள் பலர், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டு ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திற்கு பூரண ஆதரவினை வழங்கி வருகின்றார்களே ஒழிய வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும் அல்ல.

நாங்கள் கடந்த காலங்களில் பிரதேசசபை தொடங்கி நாடாளுமனற் தேர்தல் வரை பலருக்கு வாக்களித்தும் எந்தப் பலனையும் காணவில்லை.

இவ்வாறு நாம் அளித்த வாக்குகள் ஊடாக பதவிக்கு வந்த ஜனாதிபதி கூட சிறுபான்மை இனங்களுக்கு மாறாக செயற்பட்டிருக்கின்றார்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைக்காக எப்படிப் போராடுகின்றதோ அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிறுபான்மையினருக்கு அளித்த வாக்குறுதிகளுக்காகவே  இன்னும் போராடுகின்றார்.

மேலும் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஆட்சிக்கு பின்னரே வெள்ளை வான் கலாசாரத்தை நாங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம். வடக்கு- கிழக்கில் படைகளிடமிருந்த தனியார் காணிகளை மீட்டுக்கொண்டிருக்கின்றோம், கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள், அபிவிருத்திகளும் தமிழர் வாழும் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று வடக்கு கிழக்கிலுள்ள பிரச்சினைகள், தமிழர்களுடைய தீர்வு போன்றவற்றை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்வதற்கு ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இருக்கின்றார்கள்” என   விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.