வடக்கு,கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நிதி இனி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் கையளிக்கப்படும்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் களுதாவளையில் தெரிவிப்பு.

(க. விஜயரெத்தினம்)
வடக்கு,கிழக்கு மாகாணத்தின்  அபிவிருத்திக்கான நிதி இனி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் கையளிக்கப்படும்.

வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கான நிதியானது இனி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடமே கையளிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா-மகேஷ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

களுதாவளை மகாவித்தியாலய
(தேசியபாடசாலை)பாடசாலையின் வருடாந்த விளையாட்டு
போட்டி அதிபர் தலைமையில் சனிக்கிழமை(9)பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது.நிகழ்வில் கல்வி இராஜங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டபோது
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கருத்தினை முன்வைத்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம்,மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்கள் தொடர்ந்து கருத்துரைக்கையில்:-

எமது ஐக்கிய தேசிய முன்னணியினர் ஆட்சிபீடமேற நூறு வீதம் பிரதான பங்காற்றியவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினரே. இதனால்தால் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

உண்மையில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக கூட்டமைப்பினருக்கு நன்றியினை தெரிவித்துகொள்கின்றேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் எதிர்கால தீர்வை நோக்கியே எம்முடன் கைகோர்த்துள்ளனரே தவிர சுயநலத்திற்காகவல்ல.

கடந்த இரு மாதங்களின் முன்பு எங்களுடைய பிரதமர் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக சட்டத்தோடு போராடி ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார்.இதற்கு பக்கபலமாய் நின்றுதவிய சிறுபான்மை மக்களது தீர்வுகளுக்கு தமது பங்களிப்பினை தருவார் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற எமது நாட்டிலுள்ள மக்களும் புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரும் பொறுமையாக இருக்க வேண்டும். சிலரது விமர்சனங்கள் எங்களை பாதிப்பதோடு மட்டுமல்லாது தெற்கிலும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

நான் இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு எனது கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாக்குபலமே முக்கியபங்கு . இதுவே எங்களது மக்களை கௌரவப்படுத்தி என்னை கல்வி இராஜாங்க அமைச்சராக எங்களது பிரதமர் நியமிக்க காரணியாகும்.

எனக்கு கிடைத்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சு பதவியானது வடக்கு, கிழக்கு மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.இதனை சரியாக பயன்படுத்தி வடகிழக்கின் கல்வி வளர்ச்சியை உயர்த்த வேண்டும்.யுத்தத்தினால் அழிவடைந்துள்ள வடகிழக்கின் கல்வி,பொருளாதாரம்,உட்கட்டமைப்பு வசதிகளை சீர் செய்யவேண்டிய பாரிய பொறுப்பு எனக்குள்ளது.

நான் களுதாவளை கிராமத்திற்கு  முதல்தடவையாக வருகைதந்துள்ளேன்.நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பவியேற்ற பின்பு களுதாவளை மாகாவித்தியாலயத்திற்கு முதல்முறையாக வருகை தந்தமை எனக்கு பெருமையை தேடித்தந்துள்ளது.ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும்,நானும் சேர்ந்துதான்  இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி தந்திருக்கின்றேன்.இப்பாடசாலையின் ஊடாக இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சி உயர்த்தப்பட்டு கல்வியில் சிறப்பான விளைச்சல்,பயன்கள் கிடைக்கவேண்டும்.இதன்மூலம் வலுவான சமூக கட்டமைப்பு உருவாக்கப்படும்.

யுத்தத்தினால் பாதிப்புற்றது எமது வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாத்திரமே, யுத்தத்தினால் போராடிவந்த இரு மாகாணங்களும் இன்று மக்களின் தேவைக்கேற்ப போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதேபோல் பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்காக இயற்கையோடு போராடவேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.