மட்டக்களப்பில் நாளை ஜனாதிபதி முக்கிய நிகழ்வுகளில்

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நாளை (08) முற்பகல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறும்.

கிராமசக்தி மக்கள் இயக்கமானது, மக்களை தங்கிவாழும் மனநிலையிலிருந்து சுயமாக எழுந்திருக்க உதவும் திட்டமாகும். தனியார் துறையின் பங்களிப்புடன் தற்போது இத்திட்டம் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

2018ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமசக்தி சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகள் 42 மில்லியன் ரூபாவாகும் என்பதுடன், அம்பாறை மாவட்டத்திற்கு 66 மில்லியன் ரூபாவும் திருகோணமலை மாவட்டத்திற்கு 33 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் 526,576 மக்களில் 11.3 வீதமானவர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் 649,402 மக்களில் 2.6 வீதமானவர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 379,541 மக்களில் 10 வீதமானவர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்வதற்காக கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து நாளை இடம்பெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.

மாகாணத்தின் அரசியல் பிரமுகர்களும் அரசாங்க அதிகாரிகளினதும் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இக்கூட்டத்தில் பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு, அவற்றை தீர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் கிழக்கு மாகாண கிராமசக்தி சங்கங்களுக்கும் இடையிலான இரண்டு ஒப்பந்தங்கள் நாளை இடம்பெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன. அவை கடற்தாவர ஏற்றுமதி மற்றும் முருங்கை இலை கொள்வனவு செய்வது தொடர்பானதாகும்.

இதேநேரம் ஜனாதிபதி அவர்கள் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் மட்டக்களப்பு மண்முனை சத்துருக்கொண்டான் கிராமத்திற்கும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

468 குடும்பங்கள் வாழும் இக்கிராமத்தில் 91 குடும்பங்கள் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களாக இருக்கின்ற அதேநேரம், அக்குடும்பங்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்வதற்காக கிராசக்தி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறியவுள்ளார்.

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மூலம் தற்போது செயற்திறன்மிக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 1,000 ஆகும். அவற்றில் 700 கிராமங்கள் சமூக நிர்வாக கிராமங்களாகும். 300 கிராமங்கள் உற்பத்தி சேவையை முன்னுரிமைப்படுத்திய கிராமங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 2020ஆம் ஆண்டளவில் அக்கிராமங்களின் எண்ணிக்கையை 4,000 வரையில் அதிகரிக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.02.07