கிழக்கு ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி கல்விக்கு செல்கிறது

கிழக்கு மாகாண ஆளுநர் மாளிகையின் பராமரிப்புச் செலவுக்கான நிதியை, தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க, ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தீர்மானித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் மாளிகையின் பராமரிப்புச் செலவுக்காக வருடாந்தம் 20 மில்லியன் ரூபாய் நிதியை, கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

இந்நிதியை, ஆளுநர் மாளிகை பராமரிப்புக்குப் பயன்படுத்துவதை நிறுத்தி, கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்துமாறு, ஆளுநர் பணித்துள்ளார்.

இதன்பிரகாரம், நிதியமைச்சு, திட்டமிடல் அமைச்சு, கல்வியமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலையடுத்து, கிழக்கு மாகாணத்தில் தரம் ஐந்து வரை பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களுக்கு, மாதாந்தம் 500 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்குமாறு, ஆளுநர் பணித்துள்ளார்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு, குறித்த மாணவர்களுடைய பெயரில் வங்கிக்கணக்கொன்று திறக்கப்பட்டு, மார்ச் முதலாம் திகதி தொடக்கம் அவர்களது வங்கிக் கணக்கில் மாதாந்தம் 500 ரூபாயை வைப்பிலிடுமாறும், அதிகாரிகளுக்கு, ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய தந்தையை இழந்து, வருமானமற்று இருக்கின்ற நிலை தொடர்பில், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்தே, அவர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.