சம்பந்தன் ஐயாவுக்கு பகிரங்க மடல் .அடுத்ததேர்தலில் அம்பாறையில் கூட்டமைப்பு போட்டியிடுமா ?

மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயா அவர்கட்கு!
 
கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பாக கடிதங்கள் மூலமும், நேரடியாகவும் த.தே.கூட்டமைப்பின் தலைமைக்கும், அங்கம் வகிக்கும் கட்சி தலைமைகளுக்கும், அரசியல் பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து எங்கள் கோரிக்கையை முன்வைத்தும் இன்றுவரை முடிவடையாத நிலையில் விரக்தியடைந்துள்ள இப்பிரதேச மக்களின் உள்ளக்குமுறலை ஊடகம் வாயிலாக பகிரங்க மடல் மூலம் தெரிவிக்கின்றோம்.

 
கல்முனை தமிழர்களது பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்று என்பதை தாங்கள் அறிவீர்கள். ஏறத்தாழ கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வாழ் தமிழர்கள் உயிர் பொருளாதாரம் பூர்வீகம் என்பவற்றை பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் எமது சகோதர இனங்களிடம் இழந்து நின்றமை கடந்தகால கசப்பான நினைவுகள். இவையாவற்றையும் எதிர்கொண்டபோதும் எமது மக்கள் தேசியத்தின் மீது பற்றுறுதியுடனேயே இதுவரைகாலமும் இருந்து வருகின்றனர்.
 
விசுவாசமுள்ள மக்களை கல்முனையிலும், அம்பாறையிலும் தமிழ்ர்களது ஏக பிரதிநிதிகளான(?) எமது தேசியக கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் வஞ்சிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டவும், அதற்கான தீர்வைப்பெறவுமே இத்தொடர்பாடலை மேற்கொள்கின்றோம்.
 
கல்முனையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நீங்கள் சார்ந்த இனம், இலங்கை அரசின் ஆகக் குறைந்த மட்ட நிருவாக அலகான பிரதேச செயலகமொன்றை பெறப்போராடி வருவதை மறைந்திருந்து நீங்கள் வேடிக்கை பார்ப்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
 
மழைக் காலத்தில் சப்தமிடும் தவளைகளுக்கொப்பாக தேர்தல் பரப்புரைக்காக மட்டும் ஒப்புக்காக “கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும்” என்று நீங்கள் பல மேடைகளில் தெரிவித்திருப்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதன்பின்னர் மறு தேர்தல்வரை நீங்கள் அதை மறப்பது மட்டுமன்றி அம்பாறை மற்றும் கல்முனைத் தமிழர்களுக்கு விரோதமாகவே உங்களின் செயற்பாடுகள் அமைந்ந்து விடுகின்றன.
 
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தனியான கட்டிடம் உள்ளது, ஆளணிகளுடன் 29 கிராம சேவகர் பிரிவுகளுடனும் இயங்கி வருகிறது. ஆனால் இதனை தரமுயர்த்துவதில் என்ன தடை?கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதால் முஸ்லிங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை ஆனால்,  சில அரசியல்வாதிகள் இதனை அவர்களின் அதிகாரங்களை பயன்படுத்தி தடுத்து அரசியலுக்காக அந்த மக்களை குழப்பி வருகின்றார்கள்.
 
முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்ககி அவர்களுக்கான தனியான பிரதேச செயலகம் இயங்கிவருகின்றது. அவர்களது விடயங்களில் நாங்கள் இடையூறு செய்யவில்லை இயங்கிக்கொண்டிருக்கும் எங்கள் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தாருங்கள் எனபதுதான் எங்களது கோரிக்கை.
 
இலங்கையில் நிலத்தொடர்பற்ற பிரதேச செயலகங்கள் இயங்குகின்றது. அவவாறே இங்கும் இயங்கலாம்.
 
தேசிய அரசியல் என்ற போர்வைக்குள் வடக்கு-கிழக்கு இணைப்பு உறங்குவதற்காக எம்மக்களை நிர்வாணமாக்கி அலையவிட்டுள்ளீர்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. எமது மக்கள் எல்லாவற்றையும் இழந்திருக்கின்றார்கள் ஆனால் எதற்கும் வருந்தியதில்லை. காரணம் அவர்கள் தன்மானத்தை ஒருபோதும் இழந்ததில்லை. ஆனால் ஒவ்வொரு தேர்தலுக்கும் உங்களது பசப்பு வார்த்தைகளை நம்பி வாக்களித்து இன்று தன்மானத்தை இழந்தநிலைக்குள்ளானோமே என்று வருந்தவேண்டிய கட்டத்தில் இருக்கின்றனர்.
 
உங்களால் இதனை தரமுயர்த்துவதென்பது மிகச் சாதாரணமென்பது உங்களுக்கும், எங்களுக்கும் தெரியும். ஆனாலும், அது தொடர்பில் நீங்கள் முழுமையாக முயற்சிப்பதில்லை என்பதையும் நாமறிவோம். அரசியலில் ஞானம் பெற்ற தாங்கள் சில அடிப்படை விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துதல் மிக அவசியமாகின்றது. வடக்கு-கிழக்கு இணைப்பது தொடர்பில் நீங்கள் எதிர்பார்க்கும் ஒப்புதல்களை எந்த முஸ்லிம் கட்சிகளும் உங்களுக்கு வழங்கியதில்லை.வழங்கப்போவதுமில்லை. அவ்வாறுதான் ஒப்புதல்களை அவர்கள் வழங்கினாலும் அதில் அவர்களது கோரிக்கையாக தென்கிழக்கு அலகு என்ற முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டவொரு ஆட்சிப் பிரிவை அவர்கள் கோருவார்கள்..
 
அவ்வறானதொரு சந்தர்ப்பத்தில் அவர்களது ஆளுகைக்குள் வரக்கூடிய எமது பிரதேச செயலகம் தரமுயரத் தடையாக இருப்பவர்கள் எப்படி எம்மக்களுடன் அந்நியோன்னியத்தை வளர்த்துக்கொள்வார்கள் என்பதை புரிந்துகொள்வது கடினமானதல்ல. இவ்வாறானதொரு சமூகத்திடம் எமது வாக்குகளைப்பெற்று ஆட்சிபீடமேறும் தாங்கள் எங்களை அடகுவைப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் ஞானமற்ற தன்மையினால் தென்கிழக்கு அலகென்பது மறைந்து கிழக்கு மகாணம் என்கின்ற நிலைக்கு அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டேதானாகவேண்டும்.
 
அம்பாறை மாவட்டமும் கல்முனையும் த.தே.கூட்டமைப்பின் அரசில் பயணத்தில் பெரும்பங்காளிகள் என்பதை தாங்களும் நாங்களும் நன்கு அறிவோம். தேசிய பட்டியல், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளில் ஆதிக்கம் இவையனைத்துக்கும் எமது வாக்குகள் அவசியம் என்பதை நீங்கள் நன்கு உணர்ந்துள்ளீர்கள்.
 
ஆனாலும் பெரும் நிலப்பரப்பும் ஏறத்தாள 75000 வாக்காளர்களையும் கொண்ட அம்பாறை மாவட்டத்திற்கு 2 வருடங்களேனும் தேசியம் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரையோ, 2 மாகாண சபை உறுப்பினர்களை உருவாக்கும் எமது மாவட்டத்திற்கு ஒரு மாகாண அமைச்சரையோ வழங்க உங்கள் பிரதேசவாதம் இடம்கொடுப்தில்லையா என்ற சந்தேகமும் எழுகிறது.  எமது பிரதேச செயலக விடயத்தில் உங்களின் அலட்சியப்போக்க்கை காட்டுகிறது இதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
 
இவைகள் கடந்த காலங்கள். அவை கடந்ததாக இருக்கட்டும் அடுத்து வரும் எந்த தேர்தல் என்றாலும் அதற்கு முன்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த் வேண்டும்  இந்த அரசாங்கத்தின் உருவாகத்தில் முக்கிய பங்குதாரர் நீங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி துரித நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்பு கின்றோம்.
 
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமல் த.தே.கூட்டமைப்பு அடுத்த எந்த தேர்தலுக்கும் இங்கு வரவேண்டாம் என்பதையும் பகிரங்கமாக அறியத்தரும் அதே வேளை உங்களிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பாபர்க்கின்றோம்.