பிரதான வீதிகளில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க நடவடிக்கை

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை – மணல்பிட்டி பிரதான வீதியின் அருகே இரவு நேரங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

வீதிகளில் வீசப்படும் கழிவுகள் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைக்குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தவிசாளர் தொடர்ந்தும் கூறுகையில்,
கொக்கட்டிச்சோலை – மணல்பிட்டி வீதியின் அருகில், கடந்த காலங்களில் இரவுநேரங்களில் வர்த்தக நிலையங்களின் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் போன்றன பைகளில் கட்டப்பட்டு வீதியின் ஓரங்களில் இனந்தெரியாதோரால் வீசப்பட்டு வந்தன. அவ்வாறு வீசப்பட்ட கழிவுகள் குறித்த வீதியின் இருபக்கமும் நிரம்பி காணப்பட்டமையுடன், துர்நாற்றமும் வீசத்தொடங்கிய நிலையில் பிரதேசசபையினால் அப்பகுதி அண்மையிவ் சிரமதானம் செய்யப்பட்டு, கழிவுகள் அகற்றப்பட்டன.

கழிவுகளை பிரதான வீதிகளின் ஓரங்களில், பொதுஇடங்களில் கொட்டுபவர்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். குறித்த கண்காணிப்பின் மூலமாக இனங்காணப்படும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். சிறந்த சுற்றாடலைப் பேணும் முகமாக கழிவகற்றல் தொடர்பில் மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதுடன், மேலும் சிறந்த கழிவகற்றலை பிரதேசத்தில் பேணும் பொருட்டு மாவடிமுன்மாரியில் உக்காத கழிவுகளை தரம்பிரிப்பதற்கான நிலையத்தினை அமைத்து, அப்பணியினை மேற்கொண்டு வருகின்றோம். உக்ககூடிய கழிவுகளை பிரதேச செயலகத்தினால் எமக்காக வழங்கப்பட்டுள்ள பெருவட்டை பகுதியில் கொட்டுவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம். எனவே கழிவகற்றல் தொடர்பில் மக்களும் தமக்கான ஒத்துழைப்பினை வழங்குவதுடன், பொது இடங்களில் கழிவினை கொட்டுபவர்கள் தொடர்பில் பிரதேசசபைக்கு தகவல்களை வழங்குமாறும் குறிப்பிட்டார்.