காட்டுயானைகளின் தொந்தரவுக்கு தீர்வு காணாதுவிடின் மக்கள் வீதிக்கு இறங்குவதை தவிர்க்க முடியாது.

காட்டுயானைகளின் தொந்தரவுக்கு தீர்வு காணாதுவிடின் மக்கள் வீதிக்கு இறங்குவதை தவிர்க்க முடியாது என மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

காட்டு யானைகளினால் ஏற்பட்டிருக்கின்ற தொல்லை தொடர்பில் இன்று(4) திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைக்குறிப்பிட்டார்.

சபையின் தவிசாளர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் விவசாயச் செய்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் அறுவடை நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தற்போதைய சூழலில், மக்களுக்கு, காட்டு யானைகள் பெரிதும் சிரமங்களை கொடுத்து வருகின்றன. விவசாய செய்கைகளை அழிப்பது, பயன்தரு மரங்களை அழிப்பது போன்ற செயல்களை செய்துவருவதுடன், மனித உயிர்களையும் பலியெடுத்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு இரவிலும் தூக்கமின்றி சிறுவர்களும், பெரியவர்களும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

மக்கள் குடியிருப்புக்களுக்குள் உள்நுழையும் யானைகள், குடியிருப்பை அண்டிய இடங்களில் உள்ள பற்றைகாடுகளிலும் பகல் நேரங்களில் தங்கிநிற்கின்றன. இதனால் வீட்டினை விட்டு வெளியில் செல்வதற்கும், தமது மந்தைகளை மேய்க்கசெல்வதற்கும் மக்கள் அஞ்சுகின்றனர். மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட தாந்தாமலை, மக்களடியூற்று, நாற்பதுவட்டை, மாவடிமுன்மாரி, நெல்லிக்காடு, குளுவினமடு, கொல்லநுலை போன்ற பகுதிகளிலே காட்டுயானையின் தொல்லை அதிகம் அதிகரித்திருக்கின்றன. இதனால், இப்பகுதியில் உள்ள மாணவர்களும் தமது கற்றல்செயற்பாடுகளில் ஈடுபடமுடியாதவர்களாக உள்ளனர். காலை 7.30மணிக்கு பாடசாலை ஆரம்பிக்கின்றது. ஆனால் மாணவர்கள் அந்நேரத்திற்கு முன்பாக பாடசாலைக்கு செல்லமுடியாதவர்களாக உள்ளனர்.

காட்டுயானைகளின் நடமாட்டம் 8.30மணி வரையும் உள்ளமையினால் மாணவர்கள் பாடசாலைக்கு நேரத்திற்கு வருகைதருவதற்கு அஞ்சுகின்றனர். இதனால் உரிய நேரத்திற்கு சமுகம் கொடுத்து கற்றலில் ஈடபடமுடியாதவர்களாக உள்ளனர். மாணவர்கள் போக்குவரத்துச் செய்கின்ற வீதிகளின் அருகில் பற்றைக்காடுகள் உள்ளமையினால் பகல்நேரங்களிலும் மிகுந்த பயத்தின் மத்தியிலே போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர். அண்மையில் குளுவினமடு பகுதியில் வைத்து காலை 8.30மணியளவிலே ஒருவரை யானைதாக்கியிருந்தது. இதன்காரணமாக இந்நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாதிருக்க உடனடியாக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களுக்கும் கடிதம்மூலமாக தெளிவுபடுத்தியிருக்கின்றோம். அவ்வாறு இப்பிரச்சினைக்கு தீர்வுகளை உரிய திணைக்களங்கள் பெற்றுக்கொடுக்காவிடின் மக்கள் வீதிக்கு இறங்குவதை தவிர்க்க முடியாது என்றார்.