மட்டக்களப்பில் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன்கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கூட்டம் .

அதி மேதகு ஜனாதிபதியினுடைய கிராம சக்தி மக்கள் இயக்க வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாணத்துக்கான செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேர்பா மண்டபத்தில் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன்  நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்துடனான நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (01.02.2019) முற்பகல் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சி.பல்லேகம தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.அசீஸ், கிராம சக்தி வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சி.டி.களுவாராச்சி, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியபதி கலபதி, ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இணைப்புச் செயலாளர் டாக்டர் கோல்டன் பெர்ணான்டோ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா உதயகுமார், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ஆகியோரும் பங்கு கொண்டனர்.

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணிமூர்த்தி, பிரதி மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், முப்படைகளின் அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இன்றைய கலந்துரையாடலின் போது, ஜனாதிபதியின் வருகை, பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்வு , நிகழ்வின் ஏற்பாடுகள், பங்குபற்றுனர்கள், நிகழ்வொழுங்குகள், ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள பின்தங்கிய கிராமமான சத்துருக்கொண்டான் கிராமத்துக்கான விஜயம் தொடர்பான விடயங்கள் எனப் பல்வேறுபட்டவைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

பெப்ரவரி 08ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறும் ஜனாதிபதியின் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களின் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமசக்தி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான சமர்ப்பண விளக்கமளித்தலுடன் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த மாநகர சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது மக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.