மீனின் விலையை மீனவர்களே தீர்மானிக்க வேண்டும் – மட்டு – மாவட்ட அரசாங்க அதிபர்.

மீனின் விலையை மீனவர்களே தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டும். இடைத்தரகர்கள் இருக்கக்கூடாது. அதற்கான செயற்பாடுகளில் மீனவர் கூட்டுறவுச் சம்மேளனம் மேற்கொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மீனவர்களது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

காலங்காலமாக பயன்பட்டு வந்த முறைகளிலிருந்து இரசாயனங்களைப் பயன்படுத்துவனாலேயே வாவிகளில் மீன்களின் குறைவு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் குளங்களைப் போன்று ஆறுகளில் மீன்குஞ்சுகளை விடுவது சாத்தியமில்லை இருந்தாலும் எதிர்காலத்தில் மீனவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் கண்டல் தாவரங்களைப் பாதுகாத்தல், அவை வளரக்கூடிய இடங்களில் நடுகை செய்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளமுடியும்.

கலட்சால் தொழில் கற்கைகளை மேற்கொள்ளக்கூடிய சமுத்திரவியல் பல்கலைக்கழகம் மட்டக்களப்பில் உள்ளது. இருந்தாலும் அதனைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவாக இருக்கிறது. தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியில் மீனவர்கள் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் சரியான முறையில் கடலைப் பயன்படுத்துவதனாலேயே இந்தியாவிலிருந்தும், வெளி இடங்களிலிருந்தும் மீன்பிடியாளர்கள் வருகிறார்கள். பல நாட் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலின் போது, 2001ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி வெளியான வாவிச் சட்டதிட்டங்களை அமுல்படுத்தல், மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளல், அனுமதியற்ற மீன்பிடியில் ஈடுபடுவதனைத் தடுத்து நிறுத்துவதற்கான விழிப்பூட்டல் நடவடிக்கைகளை எடுத்தல், அசுத்தமான நீலை வாவிக்குள் திறந்து விடுதலைத் தடைசெய்தல், வாவிக் கரைகளில் கண்ணாத் தாவரங்களை நடுதல் உள்ளிட்ட 20 விடயங்கள் ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கடல் தொழில் நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் சுக்சான் குருஸ், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் ஏ.குலம், செயலாளர் ஆர்.இருதயநாதன் மற்றும் உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.