கதிரைக்கு புகழ் சேர்க்கின்ற தலைமைகளே வேண்டும் – ஸ்ரீநேசன்

(மயூ.ஆ.ம) பதவிக்காக கதிரையை தேடுபவர்களைவிட  கதிரைக்கு புகழ் சேர்க்கின்ற தலைமைகளே வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்

மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் 2019ஆம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நாவற்காடு பாரத் விளையட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் இரா.தியாகரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற போதே இதனை குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மேற்கு  வலயத்தை பொறுத்தளவில் கதிரைக்கு புகழ் சேர்க்கின்ற தலைவர்களே வேண்டுமே ஒழிய கதிரையின் புகழில் வாழ்கின்ற தலைவர்கள் எங்களுக்கு தேவையில்லை.

மட்டக்களப்பு மேற்கு  வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள் தங்களை அர்ப்பணித்து வலயத்திற்கு சேவையாற்றி வருகின்றார்கள்.
இவர்களுடைய வழிகாட்டலில் இவ்வலயம் வளர்ந்து வருகின்றது.இந்த வளர்ச்சிப் பாதையில் எந்த தடைகற்கள் வந்தாலும் அவற்றை நாங்கள் விலக்கி வளர்த்து செல்வதற்கு எங்களுடைய பரிபூரணமான ஒத்துழைப்பை நாங்கள் தருகின்றோம். எங்களை பொறுத்த வரையில் யார் நல்லவர் என்பதற்கு அப்பால் நியாயம் என்பது வெல்லப்பட வேண்டும் என்பதுதான் உண்மை. இவ்வலயம் முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற லஞ்சம்,ஊழல்,மோசடி இல்லாத தலைமைத்துவங்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றன.

ஒருதடவை இந்த வலயம் ஐம்பது வீதத்திற்கு மேற்பட்ட பெறுபேறுகளை பெற்ற போது பார்த்து எழுதி பெற்றதாக மொட்டைக்கடிதம் எழுதியவர்களும் இருக்கின்றார்கள்.
இப்படி வலயத்தின் வளர்ச்சியை, வெற்றியை மழுங்கடிக்க நினைக்கின்ற இப்படிப்பட்ட ஒரு மறைந்த நிலைச் சிந்தனையாளர்களால் இந்த வலயத்தை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது.
தேவையில்லாத விதண்டாவாதங்களை விடுத்து எமது வலயத்தை சரியான தலைமைத்துவத்தின் கீழ் கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.