குளுவினமடுவில் யானை தாக்கியதில் ஒருவர் பலி 

கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட குளுவினமடு பகுதியில் வைத்து யானைதாக்கியதில் ஒருவர் பலியாகிய சம்பவம் இன்று(01) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் பலியானர், குளுவினமடு கிராமத்தினைச் சேர்ந்த சிதம்பரபிள்ளை சின்னத்தம்பி(வயது 78) என இனங்காணப்பட்டுள்ளது.
தமது இல்லத்தில் இருந்து 300மீற்றர் தூரத்தில் உள்ள பகுதியில், தமது மாடுகளை இன்று(01) காலை 8.30மணியளவில் மேய்த்துக்கொண்டிருந்த போது யானை தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை, நாற்பதுவட்டை, குளுவினமடு, கொல்லநுலை, மக்கடியூற்று போன்ற பல பகுதிகளில் யானையின் தொல்லை அண்மைக்காலங்களாக அதிகரித்துள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். மக்கள் வாழும் குடியிருப்பு நிலங்களுக்குள் உட்புகுந்து பயன்தரு மரங்களையும், பயிர்செய்கைகளையும் அழித்துவருவதுடன், மக்களும் உறக்கமின்றி உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
பாடசாலைகளுக்கும் காலை 7.30மணிக்கு முதல் செல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலையிலும் மாணவர்கள் உள்ளனர். குடியிருப்புக்களுக்குள் உள்நுழைய காட்டுயானைகள் மீண்டும் அடர்ந்த காடுகளுக்குள் செல்லாமல் மக்கள் வாழும் பகுதியில் உள்ள பற்றைக்காடுகளிலும் தரித்து நிற்பதாகவும் கூறுகின்றனர். இதன்விளைவே இன்று காலை 8.30மணியளவில் நடைபெற்ற சம்பவம் எனவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதன்காரணமாக காலை 9மணிக்கு பின்னர்தான் போக்குவரத்தினை செய்யகூடிய நிலை காணப்படுவதாகவும், மாலை 3மணிக்கு பின்னர் நடமாடுவதென்பதும் மிகவும் அச்சத்தினை ஏற்படுத்தியிருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் இன்னும் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதனையும் தவிர்க்க முடியாதுபோகும் எனவும் இப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.