கொல்லநுலையில் குடிநீர் வழங்கி வைப்பு

மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட குளுவினமடு, கொல்லநுலை, தேவிலாமுனை மக்களுக்கான குடிநீர் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

உன்னிச்சைக்குளத்திலிருந்து குழாய்மூலமாக கொண்டுவரப்படுகின்ற குடிநீரே இம்மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. மொத்தமாக நான்கு இலட்சம் ரூபாய் செலவில் இக்குடிநீர் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான செலவில் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தினை இராமகிருஸ்ணமிசன் அமைப்பினரும், ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை குளுவினமடு மக்களும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலமாக இப்பிரதேச மக்கள் குடிநீருக்காக பல இன்னல்களை எதிர்கொண்டு வந்தமையுடன், தற்காலிகமாக மணல்பிட்டி ஆற்றிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டிருந்தது. அக்குடிநீரும் குடிப்பதற்கு உகந்ததற்ற நிலையிலேயே உன்னிச்சைக்குளத்திலிருந்து சுத்திகரித்து அனுப்பப்படுகின்ற குடிநீர் மக்கள் பாவனைக்காக, இலங்கை இராமகிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி அஸராத்மானந்தா, இராமகிருஸ்ணமிசனின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் சுவாமி தக்ஜானந்தா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.