சமுக முன்னேற்றம் தொடர்பில் ஈடுபாடில்லாதவர்களாக தமிழர்கள் உள்ளனர்.

(படுவான் பாலகன்) பொருளாதாரம், அரசியல், பண்பாடு, கல்வி போன்ற சமுக முன்னேற்றம் தொடர்பிலான விடயங்களிலே நாங்கள் ஈடுபாடில்லாதவர்களாக இருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமாகிய மா.உதயகுமார் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச பொங்கல் விழா இன்று(26) சனிக்கிழமை முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற போது, பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக்குறிப்பிட்டார்.

மாவட்ட செயலாளர் தொடர்ந்தும் அங்கு, உரையாற்றுகையில்,
வீடுகளிலும், வர்த்த நிலையங்களிலும், பாடசாலைகளிலும், திணைக்களங்களிலும், பொது இடங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனால் மட்டக்களப்பு மாவட்டம் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றது.

தைப்பொங்கல் தமிழர்களுக்கு மிகச்சிறப்பான நாளாக கருதப்படுகின்றது. அதேவேளை தமிழர்களையும், உழவர்களையும் இரண்டுபிரிவினர்களாக பிரித்துப் பார்க்க முடியாது. இவ்வாறான பண்டிகை புரதான காலங்களில் இருந்து இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான பண்பாடுகளை அடுத்த தலைமுறையினருக்கும் கடத்த வேண்டியது காலத்தின் தேவையாகவும் உள்ளது. இதற்கேற்றால்போல் மண்முனை தென்மேற்கு பிரதேச பொங்கல் விழாவில், தொழில்சார் முறைகளையும், அதோடு இணைந்த வாழ்க்கை முறையினையும் காட்சிப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. அத்தோடு பண்பாட்டு கலைகளையும் ஆற்றுகை செய்து காட்டியுள்ளமை மகிழ்வுக்குரியது. கலைகள் அந்தப்பிரதேசத்தின் வாழ்வியல் முறையினையும் எடுத்துக்காட்டக்கூடியது. இவ்வாறான பண்பாடுகளோடு பொருளாதாரம், அரசியல், கல்வி போன்ற சமுக முன்னேற்றம் தொடர்பான விடயங்களிலே தமிழர்கள் ஈடுபாடில்லாதவர்களாக இருக்கின்றமை மிகவும் கவலைக்குரியது.

இலங்கை நாட்டில், ஒரு காலச்சூழலில் தமிழர்கள் எல்லாத்துறைகளிலும் சிறப்புற்று விளங்கினர். ஆனால், இச்சமுகம் கடந்த காலங்களிலே இடம்பெற்ற பல்வேறு இன்னல்களால் பின்நிலையில் நிற்கின்றனர். முன்னர்போன்று, தற்காலத்திலும் வாழ்வதற்கு, தமிழர்கள், பொருளாதாரம், பண்பாடு, விழுமியங்கள், கல்வி, அரசியல் போன்றவற்றை மீண்டும் மீள அமைக்க வேண்டும். அதேவேளை கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு சென்றவர்கள், பண்பாடுகளையும், விழுமியங்களையும் வளர்ப்பதில் ஆர்வமுடன் செயற்படுகின்றனர். ஆனால், இங்குள்ள நாம் இருப்பதையும் இழந்துகொண்டிருக்கின்றோம். எதிர்காலம் தொடர்பாக அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார்.