பேரவலத்தில் உள்ள மல்லிகைத்தீவு கிராமம் – தற்போதைய நிலை என்ன? உடனடி நடவடிக்கை என்ன செய்ய வேண்டும்?

கேதீஸ்-

அம்பாறை மாவட்டம்   சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட மல்லிகைத்தீவு எனும் தமிழ் கிராமம் எதிர்நோக்கியுள்ள பேரவலம்  உயிர்கள் காவு கொள்ளப்படும் அதிர்ச்சியான தகவல் தற்போது பரவலாக பேசப்பபட்டு வருகிறது.   ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா அவர்களினால் சில  தினங்களுக்கு முன்னர்   இந்த கிராமத்தின் பேரவலம்  வெளிக்கொணரப்பட்டிருந்தது

செயலில் இறங்கிய தமிழ் இளைஞர் சேனை

இக்கிராமத்தின் தற்போதைய நிலை என்ன?  அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்  நிரந்தர தீர்வு தொடர்பாக நேரடியாக ஆராய்ந்து அவர்களுக்கு  முடிந்தவரை  உதவிகளை செய்வதற்காக கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை நேற்று (18) களத்தில் இறங்கி ஆராய்ந்திருந்தனர்.

இந்த கிராமத்தில் உள்ள கிணறுகள் மூலம் பெறப்படும் குடிநீரில் கல்சியம் அதிகமாக படிந்திருந்ததால்  அருந்துவதற்கு உகந்ததற்றதாக இருந்தும் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் பாராமுகம் பொறுப்பற்ற நிலைமையால் வேறு வழியின்றி இந்நத குடிநீரையே இம்மக்கள் அருந்தி வந்துள்ளனர். இதன் காரணமாக இந்த கிராம மக்கள்  மிகவும் பாரதுரமான நிலைமையை தற்போது எதிர்நோக்கியுள்ளனர்..

கடந்தாண்டு ரி.சின்னத்துரை(வயது 54) கே.சுப்பிரமணியம்(வயது 67) ஆகிய இருவர்.சிறு நீர் நோய் காரணமாக் உயிரிழந்துள்னர். அத்துடன்  பத்திற்கு மேற்பட்டோர் சிறு நீர் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

உடனடி நடவடிக்கையாக செய்ய வேண்டியவை என்ன?

இங்கு உள்ள கிணறுகளில் இருந்து பெறுப்படும் குடிநீரை மக்கள் அருந்துவதை உடனடியாக நிறுத்தி தற்காலிகமாக நீர் கொள்கலன்கள் மூலம் குடிநீர் சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் தேவைக்கேற்ப காரைதீவு பிரதேச சபை என்பன குடிநீர்களை வழங்க வேண்டும்.

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையால்  ஓர் இரு நீர் கொள்கலன்கள் உடனடியாக வழங்குவதற்கு நடடிவக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது  இவ்வாறு மேலும்  குடிநீர் கொள்கலன்களை வழங்க கூடிய அமைப்புக்கள் முன்வர வேண்டும்.

அனைத்து மக்களையும் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தி உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை அவசரமாக எடுக்கப்பட வேண்டும்.  இவ்விடயம் தொடர்பாகவும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிருவாகத்துடன் கலந்துரையாடியதாக இளைஞர் சேனையினர்  தெரிவித்தனர்.

 

நிரந்தர தீர்வு

மல்லிகைத்தீவு கிராமத்தின் நூழைவாயிலாக காணப்படும் மல்வத்தை பிரதான வீதியில் அமைந்துள்ள  தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையின் குடி நீர் இணைப்புக்கள்  மூலமாக  குடி நீரை வழங்க நீர் இணைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு இம் மக்கள் எதிர் நோக்கி உள்ள பாரிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து  கிராம மக்களின் எதிர்காலத்தை காப்பாற்ற காலம் தாழ்த்தாது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமானதுமாகும்.

தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை அமைச்சர் இதனை உடன் அமுல்படுத்த ஏற்பாடுகளை செய்வதுடன் த.தே. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  செயற்படுத்த துரித நடடிவக்கை எடுப்பதுடன் அனைவரும் கட்சி பேதங்கள், பிரதேச வேறுபாடுகளுக்கப்பால்  கிராமத்தின் ஒட்டு மொத்த மக்களின் எதிர்காலத்தை கவனத்தில கொண்டு செயற்பட வேண்டும்.

இங்கு 95 குடும்பங்களைச் சேர்ந்த 278 பேர் வசிக்கின்றார்கள் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான ஆரம்ப பாடசாலையும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு பொதுக் கிணறு மூலம் குடி நீர்  தாங்கியில் ஏற்றப்பட்டு அதிலிருந்து வீடுகளுக்கு குடி நீர் வழங்கப்பட்டும் வந்துள்ளது  இங்கு  உள்ள பொதுக்கிணறு உள்ளிட்ட சகல 42கிணறுகளிலும் கடந்த 2017 ஆம் ஆண்டு   குடி நீர் பரிசோதனை செய்யப்பட்டு அது அருந்துவதற்கு உகந்ததவை அல்ல என்ற விடயம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மாற்று வழி ஏற்படுத்த தவறியதாலேயே  இம் மக்கள்  இந்த அவல நிலையை எதிர் கொண்டுள்ளனர். இதற்கு  யார் பொறுப்பு வாக்கு பெற்று அரியணை ஏறிய அரசியல்வாதிகளா?  அல்லது அரசாங்க அதிகாரிகளா?

மீண்டும் பாராமுகமாக இருந்து ஒரு கிராமத்தின்  எதிர்காலத்தை அழித்து  மாபெரும் வரலாற்று பழிக்கு உட்படாமல்    சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் விரைந்து நடடிவக்கை எடுக்க வேண்டும் இதுவே அனைவரினதும் அவசரமான கோரிக்கையாகும்.