ஆசிரியர்கள் இன்றி திணரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்!! – படுவான்கரையின் கல்வியை சீரழிக்க சதியா?

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 102ஆசிரியர்கள் வெளி வலயங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளனர். அதேவேளை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு 28ஆசிரியர்களே இடமாற்றம் பெற்று வருகைதந்து தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். இதனால் பல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன.

ஆரம்பப்பிரிவுக்கு மாத்திரம் 65ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. இதேவேளை கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

அதிகஸ்ட, கஸ்ட பாடசாலைகளைக்கொண்ட வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உள்ளது. இங்கு ஆரம்பப்பிரிவுக்கு 65ஆசிரியர்கள் இன்மையானது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் கல்வியினை மிகவும் பாதிப்பதாகவுள்ளது. நகரை அண்டிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளபோதிலும், கல்வியில் பின்தங்கியிருக்கின்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்காமை இப்பகுதியின் கல்வியை சீரழிப்பதற்கான சதியா? என்ற சந்தேகம் தோன்றுவதாகவும் இப்பகுதி சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில், அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் கருத்தில்கொள்ளாமை கவலையளிப்பதாகவும் சமுக ஆர்வலர்கள் மேலும் குறிப்பிட்டனர். இந்நிலை தொடருமாயின் மாணவர்கள் அனைவரும் கல்வியைப்பெறாது, இன்னும் கீழ்நிலைக்கே செல்லும் துர்ப்பாக்கிய நிலையேற்பட வாய்ப்புள்ளதெனவும் இப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.