பாதிக்கப்பட்ட மக்களை பயங்கரவாதிகள் என கூறமுடியுமா? – நாடாளுமன்றில் கேட்டார் சாந்தி

பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாகக் கூறும் கடந்த அரசாங்கம், எம்மை போன்ற பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து பயங்கரவாதிகள் என கூறமுடியுமா என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

 

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாய கட்டளை சட்டத்தின் மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, பயத்தினால் ஓடி ஓர் இடத்தில் இருந்தவர்கள் மற்றும் சரணடைந்த அப்பாவி பொதுமக்கள் மீது அரசாங்கம் இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகளை வீசியது.

குறிப்பாக அன்று நான் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தபோது குண்டுவீச்சினால் எனது காலினை இழந்தேன். என்னைப்போன்றவர்கள் பயங்கரவாதிகளா?

மேலும் சரணடைந்தவர்களில் பெண்கள், குறிப்பாக இசைப்பிரியா போன்றவர்களுக்கு நடந்தது என்ன? இந்த வடுக்களில் இருந்து தற்போதுவரை தமிழ் மக்கள் மீளமுடியாமல் தொடர்ந்தும் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அத்தோடு தமிழ் மக்கள் மீது தாக்குதலை நடத்தி கொன்றுவிட்டு பயங்கரவாதிகள் என கூறுவது எவ்விதத்தில் நியாயமானது. அவர்களை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் நிலையை இவர்கள் பார்க்க வேண்டும். மேலும் மக்கள் மீது தாக்குதலை நடத்த காரணமாக இருந்தவர்களை தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.