உணவுக்காக கூடுதலாக செலவு செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

வாழ்வியல்களை தொலைத்தமையினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற நாம் ஆங்கில வைத்தியங்களைத் தேடாமல் எங்களுடைய இயற்கையோடு ஒட்டிய, பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துவதற்குத் தயாராகவேண்டும்  என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரணவணபவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு அரச ஹோமயோபதி வைத்தியசாலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு  தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,

ஆங்கில வைத்தியமுறைகளில் இருந்து இப்போது உலகளாவிய ரீதியில் இருப்பவர்கள் எங்களுடைய கீழைத்தேய முறைகளை அணுகி அவற்றினைப் பயன்படுத்துகின்ற ஒரு காலப்போக்கு இடம்பெறுகின்றபோது, எங்களுடைய கீழைத்தேய நாடுகளில் இருப்பவர்கள் மிகக்கூடுதலாக ஆங்கில வைத்தியத்தினை நாடிச் செல்லுகின்றமையைப் பார்க்கின்றோம்.

உண்மையில் ஹோமியோபதி, ஆயுர்வேதம், அக்குப்பஞ்சர் சிகிச்சை முறைகள் கீழைத்தேய நாடுகளில் இருந்துதான் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றன, ஆனால் அவற்றினை புதிய புதிய கண்டுபிடிப்புகளாகக் கண்டுபிடிப்பதாக மேலைத்தேய நாடுகள் அவற்றிற்கான உரிமையினைக் கொண்டு வருவதனையும், அனுபவிப்பதனையும் நாங்கள் பார்க்கின்றோம்.

மேலைத்தேய நாடுகளில் விவசாயிகள் இயற்கை உர வகைகளைப் பாவிப்பதுடன், அங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் இரசாயனப் பொருள்கள் கீழைத்தேய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. உண்மையில் அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது சுகாதாரம் சம்பந்தமாகவும் உடல் நலம் தொடர்பிலாக, தங்களது நாட்டு மக்களதும் வாழ்வியல் முறைகள் சம்பந்தமாக எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதனைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

நாங்கள் எங்களுடைய நாட்டில் எங்களுடைய முன்னோர்கள் கண்டுபிடித்த விடயங்களை மறந்து ஏனையவற்றுக்குச்  செல்லுகிறோம் . ஆனால் மேலைத்தேயத்தவர்கள் அவற்றினை பயன்படுத்துகின்றார்கள் , உரிமை கோருகிறார்கள். நாங்கள் பார்க்கிறோம் யோகாசனத்திற்காக சர்வதேச தினம் கொண்டவரப்பட்டு வெள்ளைக்காரர்கள் நம்மவர்களுக்கு கற்பிக்கின்ற நிலை உருவாகியிருக்கிறது. யோகாசனம் எங்களுடைய பரம்பரையினுடைய வாழ்வியல் முறையாகும்.

இவ்வாறான வாழ்வியல்களை தொலைத்தமையினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற நிலைமை உருவாகியிருக்கிறது. அதற்கு நாங்கள் ஆங்கில வைத்தியங்களைத் தேடாமல் எங்களுடைய இயற்கையோடு ஒட்டிய, பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துதல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக நகர்ப்பகுதிகளிலுளள உணவுக்கடைகள் இல்லாவிட்டால் உணவில்லா நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

வந்தாரை வரவேற்றும், வாழ வைக்கும் மாவட்டம் எனறு பெயர் எடுத்த நம் மாவட்டம்  உணவுக்காக மிகக் கூடுதலாகச் செலவு செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் குடித்தனக் கூறின் வருமானம் மற்றும் செலவு பற்றிய அளவீட்டின்படி அறிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக உண்ணுகிறோம்  குறைவாக வேலை செய்கிறோம். ஆகவே நாங்கள் கூடுதலாக வேலை செய்து பசிக்காக அளவுக்கு உண்பவர்களாக மாற்றம்பெற வேணடும்.

அதனால் நாங்கள் கூடுதலாக நோய்களை அனுபவிப்பவர்களாக அரச வைத்தியசாலைகளை விடவும், தனியார் வைத்தியசாலைகளிலும் கூடுதலான நேரங்களைச் செலவிடுகின்றோம். ஆகவே இவற்றினைக் குறைத்துக்கொள்ள நாம் முயல்வதன் ஊடாக அபிவிருத்தியைநோக்கி முன்னோக்கிச் செல்ல முடியும்.

கலாசார பண்பாடு, அபிவிருத்தி, இனம், மதம், மொழி சம்பந்தமாக நாம் காட்டுகின்ற, கொண்டிருக்கின்ற ஈடுபாடு மிகவும் போதாமலிருக்கிறது. அவற்றினைக் கட்டியெழுப்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந் நிகழ்வில், கௌரவ அதிதியாக பிரதி முதல்வர் க.சத்தியசீலன், சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மா.தயாபரனும், அத்துடன்,  மாநகரை ஆணையாளர் கா.சித்திரவேல், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதி ஆணையாளர் ந.தனஞ்சயன், பாலமுனை ஹோமியோபதி வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் பி.பிரவீனா, மாநகர சபைக்கணக்காளர் திருமதி ஜீ.ஹெலன் சிவராஜா, நிருவாக உத்தியோகத்தர் திருமதி ரோகினி விக்கேஸவரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு பிரதான பஸ்த் தரிப்பிடத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இவ் ஹோமியோபதி வைத்தியசாலையில் இலவசமாக மருத்துவ வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், வைததிய ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என இவ் வைத்தியசாலையின் பொறு;பதிகாரி எம்.ஏ.எம்முனீர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஹோமியோபதி அரச வைத்தியசாலையானது இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள 8ஆவது வைத்தியசாலையாகும்.

ஹோமியோபதி வைத்தியசாலைகள் வெலிசறையில் முதன் முததலாக அமைக்கப்பட்டது. அதனையடுத்து தெஹிவளை, மாத்தளை, வரக்ககாபொல, பாலமுனை, இங்கிரிய குருநாகல் ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.