முஸ்லிம் ஆளுநர் என்ற மனநிலையை மாற்றி தமிழ்பேசுபவர் என சிந்திப்போம்.

முஸ்லிம் ஒருவர் என்ற மனோநிலையை மாற்றி தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக கிடைத்துள்ளார் என்ற உரிமையில் எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
முன்னாள் ஆளுநர்கள் பெரும்பாண்மை சமூகத்தை சார்ந்தவர்கள், தமிழ் பேசத் தெரியாதவர்கள், மாகாண சபைகளின் தீர்மானங்களை அமுல்படுத்த தடையாக இருந்தவர்கள், பக்கச்சார்பாக இருந்தவர்கள் என்றெல்லாம் மிக அதிகமான குற்றச்சாட்டுக்களை கிழக்கில் வாழும் இரண்டு சிறுபான்மை சமூகங்களும் மிக நீண்ட காலமாக அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதில் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் சிலரால் இனவாத கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக கருத்து தெரிவிக்கும்போதோ கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும், கிழக்கு மாகாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் 30 வருட காலங்கள் இரண்டு சமூகங்களையும் அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும் நன்கறிந்த ஒருவர் கிழக்கு மாகாண ஆளுனராக கிடைத்திருப்பது தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குடையிலான அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான ஓர் நல்ல சந்தர்ப்பமாகும்.
அது மட்டுமல்லாது முன்னைய ஆளுநர்கள் பிரித்தாளும் தந்திரங்களுடன் கடந்த காலங்களில் செயற்பட்டு பிரதான இரண்டு சிறுபான்மையினரையும் எதிரிகளாக பார்க்க வைத்த பல சந்தர்ப்பங்களும் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆக மொத்தத்தில் முஸ்லிம் ஒருவர் என்ற மனோநிலையை மாற்றி தமிழ் பேசும் நம்பிராந்தியத்தை சேர்ந்த ஒருவர் எமக்கு ஆளுநராக கிடைத்திருக்கின்றார் என்ற உரிமையில் எமது அடிப்படை பிரச்சினைகளை புதிய ஆளுநருடைய காலத்துக்குள் தீர்த்துக்கொள்ள இரண்டு பிரதான சிறுபான்மை சமூகங்களும் முயற்சி செய்ய வேண்டும்.
“காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” வெறும் அற்ப அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம் என்ற பதப்பிரயோகத்தை முன்னிறுத்தி எமக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பை தவற விட்டுவிடாமல் செயல்படுவது காலத்தின் தேவையாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பிறுனர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.