மட்டக்களப்பில் மக்களுக்காக ஒன்றினைந்த கருணாவும் கூட்டமைப்பும்

(க. விஜயரெத்தினம்)
உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தினை தனியாகப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய(7) தினம் வாகனேரி மற்றும் உறுகாமத் திட்ட விவசாய அமைப்புகளினால் செங்கலடி நீர்ப்பாசனத் திணைக்கள காரியாலய முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

உறுகாம விவசாயத் திட்டத்தின் கீழ் உள்ள 14 விவசாய அமைப்புகளினால் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் க.பகீரதன் முன்நின்று நடாத்தியிருந்தார்.

கிரான் சந்தியில் இருந்து வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு செங்கலடி சந்தி வரையில் கொண்டுவரப்பட்டு செங்கலடி நீர்ப்பாசனத் திணைக்களக் காரியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் விவசாய அமைப்புகள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினார்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதன் உட்பட பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவ்விடம் வருகை தந்து விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் மகஜரையும் பெற்றுக் கொண்டார்.

இதன் போது விவசாயிகள் பிரிவதை எதிர்ப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், சுயநலவாதிகளே எம்மை வாழவிடுங்கள், நீர்ப்பாசனத் திட்டம் பிரிவதைத் தடுப்போம், ஏர்பிடிக்கும் எம்மை ஏமாற்றாதீர் போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் பிரிக்கப்படும் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் உறுகாம நீர்ப்பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் எதுவித பிரச்சனைகளும் இன்றி செயற்பட்டு வருகின்றது. இத்திட்டம் பிரிக்கப்பட்டால் சுமார் 5000 ஏக்கர்களுக்கு மேல் விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படும். மாவட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்படும் போது குறித்த அமைப்புகள், மற்றும் மக்களோடு கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களோ இடம்பெறவில்லை, எது வித கூட்டங்களிலோ கலந்துரையாடப்படவும் இல்லை. 30 வருட காலத்தின் பின்னர் தற்போது தான் அபிவிருத்தியைக் காணும் உறுகாமத் திட்டத்தில் இவ்வாறானதொரு செயற்பாடு விவசாயிகளைப் படுகுழியில் தள்ளும் ஒன்றாகவே இருக்கின்றது. எனவே விவசாயிகளைப் பாதிக்கும் இத்திடத்தினை ஒரு போதும் விவசாயிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்துடன் ஒரு காரியாலயம் அமைக்கப்படுவதாயின் தற்போது நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்படும் நிலப்பரப்பு மற்றும் செய்கையாளர்கள் கூடிய பகுதி என்பவற்றைக் கருத்திற்கொண்டு அமைவதுதான் இயற்கை நீதி இதுவே இப்பகுதியில் 90 வீதத்திற்கு மேற்பட்ட விவசாயிகளின் கருத்தும் ஆகும் எனக் குறிப்பிட்டு பதினான்கு கண்டங்களின் பிரதிநிதிகளினால் அவ்விடம் வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் விவசாய அமைச்சர் ஆகியோரிடம் மகஜர் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.