ஹிஸ்புல்லாஹ்வும் ஆளுநர் பதவியும்

புதிய அரசியல்யாப்பு வரவிருக்கும் நேரத்தில் ஹிஸ்புல்லா அவர்கள் பாராளுமன்றத்தில் இல்லாத

விடயமானது மிகவும் கவலைக்குறிய விடயமாகும். இந்த புதிய யாப்பு திருத்தமானது பிரதமர் ரணில் அவர்களின் பூரண சம்மதத்துடனும், சுமேந்திரன் அவர்களின் வழிகாட்டலிலும்தான் பாராளுமன்றத்துக்கு வரப்போகின்றது என்பதை யாரும் இலேசாக புறந்தள்ளிவிடமுடியாது.
இந்த நிலையில் ஆளும் கட்சியிலே இருக்கும் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள்,  பிரதமர் ரணில் அவர்களின் மனம் நோகாமல் நடப்பதையே விருப்புவார்கள். (அது கடந்தகால செயல்பாடுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்).
இப்படியான நிலைமையில் பாராளுமன்றத்தில்  எதிர்க்கட்சியிலே இருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் மட்டுமே இருந்துவந்தார்.
இந்தக்கால கட்டத்தில் கிழக்குமாகாண முஸ்லிம் மக்களின் சகல பிரச்சினைகளையும் அறிந்தவரும், அதற்காக குரல் கொடுத்து வந்தவருமான எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா அவர்கள்தான் எதிர்க்கட்சியிலே இருந்துவந்த ஒரேயொரு உறுப்பினராவார்.  இப்படியான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவர் இல்லாமலானது மிகவும் கவலைக்குறிய விடயமேயாகும். ஆளும்கட்சியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஏதோவொறு காரணத்துக்காக பகிரங்கமாக சிலகருத்துக்களை கூறமுடியாத நிலைக்கு தள்ளப்படலாம், இப்படியான நிலைமைகளில் எதிர்க்கட்சியிலே இருக்கும் முஸ்லிம் உறுப்பினர் சுதந்திரமான முறையில் தனது சமூகத்துக்காக குரல் கொடுக்க முடியும் என்பதோடு மக்களுக்கும் சில உண்மைகளை பகிரங்கப்படுத்த முடியும் என்ற நிலையும் இருந்தது. இந்தப் பாக்கியமானது கௌரவ ஹிஸ்புல்லா அவர்களுக்கே வாய்த்திருந்தது. இப்படியான நிலையில் ஹிஸ்புல்லா அவர்கள் அரசாங்க பதவியான ஆளுநர் பதவிக்காக மதிப்புக்குறிய பாராளுமன்ற பதவியை திறந்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
வரலாற்றிலே கிழக்கு மாகாணத்துக்கு ஒரு முஸ்லிம் ஆளுநர் நியமிக்கப்பட்டதானது ஒரு சந்தோசமான செய்தியாக பார்க்கப்பட்டாலும், அந்த நியமனமானது ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துதான் பெறப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. பாராளுமன்ற உறுப்பினர் பதவியென்பது ஒரு நாட்டின் மிக உயர்ந்த பதவியாகும். அதனைப் பெறுவதற்கு மக்கள் சக்தியின் உதவி தேவைப்படுவதோடு, அதனை அடைந்து கொள்வதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தேவையும் உள்ளது. அந்த இடத்தை எல்லோராலும் இலேசாக பெற்றுவிட முடியாத ஒன்றாகும். மற்ற பதவிகள் எல்லாம் அவரவர் திறமையைப் பொறுத்தும், அதேநேரம் அரசாங்க செல்வாக்கை பொறுத்தும் பெற்றுவிடலாம். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியென்பது மக்களோடும் அவர் சார்ந்த சமூகத்தோடும் சம்பந்தப்பட்ட விடயமாகும். அந்தப்பதவி மூலம் சமூகத்துக்கும், அந்த சமூகம் சார்ந்த மக்களுக்கும் நிறையவே உதவிகளும், உரிமைகளும் பெற்றுக்கொடுக்க முடியும். ( இதனைவைத்து ஒன்றுமே செய்யாது இருப்பவர்களும் உண்டு) இப்படிப்பட்ட நேரத்தில், இப்படிப்பட்ட பதவியை விட்டுவிட்டு ஆளுநர் பதவியை பெற்றதென்பது ஆச்சரியமான ஒன்றாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.
கிழக்குமாகாணத்துக்கு முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி மைத்ரி அவர்கள் நினைத்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத வேறொரு சிறந்த ஆளுமையுள்ள ஒருவரை நியமித்திருக்கலாம். அதன் மூலம் கிழக்குக்கு முஸ்லிம் ஆளுநர் ஒருவர் கிடைத்த மாதிரியும் இருக்கும், அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இருந்தமாதிரியும் இருக்கும். இதுவே முஸ்லிம் சமூகத்துக்கான சந்தோசமான செய்தியாக இருந்திருக்கும் என்பதே உண்மையாகும்.
ஆகவே இன்றய அரசியல் சூழ்நிலையானது எந்த நேரத்தில் எது நடக்கும் என்பது தெரியாமலே உள்ளது. இந்த நேரத்தில் முஸ்லிம் சமூகம்பற்றி சிந்திப்பதற்கும், குறிப்பாக வடகிழக்கு முஸ்லிம்களின் நிலைபற்றி பேசுவதற்கும், அதற்காக குரல்கொடுப்பதற்கும் இருக்கும் ஒரேயொரு எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர் என்றால் அது ஹிஸ்புல்லா அவர்கள் மட்டுமே என்றுதான் கூறவேண்டியுள்ளது. இந்த நிலைமையில் ஹிஸ்புல்லா அவர்கள் பாராளுமன்ற பதவியை விட்டுவிட்டு ஜனாதிபதியின் ஒரு பிரதிநிதியாக செயல்படக்கூடிய ஆளுநர் பதவியைப் பெற்றதென்பது முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த வெற்றியாக கருத முடியாது என்பதே எங்களின் கருத்தாகும்
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..