பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம் –

இந்த நாட்டில் நீடித்து இருக்கின்ற நீண்டகால இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டு தீர்வு எட்டப்பட்டாகவேண்டும். தமிழ் மக்கள் சார்பில் மிக நிதானமாக, மிகப் பொறுப்போடு நாடு பிளவுபடாமல் இருப்பதை உறுதி செய்து, அர்த்தமுள்ள விதத்தில் அதிகாரங்களை மாத்திரம் பிரியுங்கள். நாட்டைப் பிரிக்கவேண்டாம் என்று கேட்கின்ற நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை சிங்கள மக்கள் நழுவவிடக்கூடாது என்று அவர்களிடத்தில் உரிமையுடன் கோரிக்கை முன்வைக்கின்றேன். இந்தச் சந்தர்ப்பம் எப்போதும் இருக்காது. அதற்காக வாய்ப்பு எப்போதும் கிடைக்காது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பருத்தித்துறை முதியோர், சிறுவர் நலன் காப்பக ராஜா ராணி சேவை இல்லத்தின் ஒளி விழாவும் பருத்தித்துறை முனைப் பகுதியில் 2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் ராஜா ராணி சேவை இல்ல மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.