முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வு எதிர்வரும் 17ம் திகதி

பாடசாலைகளில் இந்த வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வு எதிர்வரும் 17ம் திகதி உத்தியோகபூர்வமாக இடம்பெறவுள்ளது.

இதற்கு முன்னர், மாணவர்களைப் பாடசாலைகளில் பழக்கிக் கொள்வதற்காக அதிபர்களின் தேவைக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தரம் ஒன்றில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது கல்வி அமைச்சின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள வசதிக் கட்டணம் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் கட்டணம் தவிர்ந்த வேறு எந்தப் பணத்தையும் பெற்றோரிடம் அறவிடக்கூடாது என்று அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் சம்பந்தப்பட்ட அதிபருக்கு எதிராக அமைச்சு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு தெரிவான மாணவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து தேசிய பாடசாலைகளில் நேற்றைய தினம் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையில் தமது பிள்ளைகள் கல்வி கற்பதற்கான பாடசாலை கிடைக்கப் பெறாத பெற்றோர் இருப்பார்களின் வலயக் கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பணிகள் எதிர்வரும் 20ம் திகதியுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.