மருந்தகங்கள் சமூகப் பொறுப்புக் கொண்டவைகளாக செயற்படவேண்டியது காலத்தின் அவசியம்

மருந்தகங்கள்  சமூகப் பொறுப்புக் கொண்டவைகளாக செயற்படவேண்டியது காலத்தின் அவசியம்
கிழக்கு பல்கலைக் கழக மருந்தியல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் ரொஷானி பிரகாஷ்
மருந்தகங்கள்  சமூகப் பொறுப்புக் கொண்டவைகளாக செயற்படவேண்டியது காலத்தின் அவசியம்  என கிழக்கு பல்கலைக் கழக மருந்தியல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் ரொஷானி பிரகாஷ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையும் மட்டக்களப்பு மாவட்ட தனியார் மருந்தக உரிமையாளர் சங்கமும் இணைந்து நடாத்திய, தற்காலத்தில் மருந்தகங்களின் செயற்பாடுகள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை 06.01.2019 நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வைத்தியரால் மருந்துக் குறிப்பு சிட்டையில் எழுதிக் கொடுக்கப்பட்டிராத நுண்ணுயிர் கொல்லி மாத்திரைகளை மருந்தகத்தால் நோயாளிகளுக்கு வழங்குவது மிகப் பெரிய தவறு, அதேபோன்று காலாவதியான மாத்திரைகளை தெரிந்தோ தெரியாமலோ கொடுத்தாலும் அதுவும் தவறான தொருவிடயமாகும்.
வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் தாதியர், வைத்தியர் உள்ளிட்ட அனைவரையும் கடந்து இறுதியில் மருந்து வழங்குனரிடம்தான் வருகின்றார் அந்த நேயாளிக்கு வைத்தியரின் கையால் மருந்து கொடுக்கப்படுவதில்லை அந்த மருந்தினை மருந்தகத்தில் மருந்தாளரே வழங்குகின்றார் ஆகையால் மிக பொறுப்புமிக்க பணி மருந்தகத்திற்கும் மருந்தாளருக்குமே உள்ளது.
சில மருந்தகங்களில் வைத்தியர் எழுதிய மருந்துக்கு பதிலாக அதே பெயரிலுள்ள வேறு கம்பனியின் வேறு தரத்தினையுடைய மருந்தினை வழங்கும் நிலையுள் உள்ளது.
இவ்வாறு நுண்ணுயிர் கொல்லி மாத்திரைகள் வழங்கலில் ஏற்படும் தவறுகள் பிழைகள், நடைமுறைப் பிரச்சனைகள் குறித்து நாம் ஒரு கலந்துரையாடலுடனான ஆய்வினை செய்தோம்.
இதில் தனியார் மருந்தகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களையும் அரச மருந்தகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களையும் உட்படுத்திருந்தோம்.
மருந்து வழங்கும்போது 300, 400 நோயாளர்கள் வரிசையில் நிற்பார்கள் ஆனால் 2,3 பேர்தான் நாங்கள் மருந்து மாத்திரைகளை வழங்குவோம் இவ்வாறான நிலையில் நோயாளர்களுக்கு விளக்கமாக சொல்லிக்கொண்டு இருக்க முடியாத நிலை ஏற்படுகின்றது என அவர்கள் தெரிவித்தார்கள்.
அதேபோல் “நாங்கள் குறிப்பிட்ட மட்டத்திற்கு வியாபாரம் காட்டவேண்டும் அப்படி குறித்த இலக்கு மட்டத்தினை அடையவில்லையானால் எமக்கு சம்பளம் கிடைக்காது அல்லது வேலையில் இருந்து நிறுத்திவிடுவார்கள்” என தனியார் மருந்தகங்களில் கடமையாற்றுவோர் தெரிவித்தார்கள்”  இப்படியான நிலையும் இங்கு உள்ளது.
அதிகமானோர் தமது சுகவீனத்துக்கு  மருந்தினைப் பெற்றுக்கொண்டு  அந்த மருந்தினை இரண்டுநாள் குடிப்பார்கள் தமக்கு சுகம் வந்தவுடன் அந்த மருந்தை நிறுத்திவிடுவார்கள். இதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் தெரிந்துகொள்வதில்லை,
எனவே  மருந்தக உரிமையாளர்களும் மருந்து வழங்குனர்களும் சமூகப் பொறுப்புள்ளவர்களாக செயற்படவேண்டியது மிக அவசியம்.” என்றார்