கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டும்.

கிழக்கு மாகாணசபைக்குரிய தேர்தல் மிகவிரைவில் நடாத்தப்பட வேண்டும். எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தக்கவைத்துக் கொள்ளும். அதில் எந்த விதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம் இல்லை. அவ்வாறு எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருசில ஆசனங்கள் குறைகாக இருந்தால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அவர்களைது ஒத்துழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும். என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் குறித்து ஞாயிற்றுக் கிழமை (06) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
கிழக்கு மாகாண சபைக்கு 37 ஆசனங்களாகும், அதில் 20 ஆசனங்கள் இருந்தால்தான் ஆட்சியமைக்கலாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்தமுறை 11 ஆசனங்களை எடுத்திருந்தது. ஆனால் எதிர்வருகின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்கின்ற அச்சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்ககை குறைந்து காணப்பட்டால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எமக்கு ஆதரவழிக்கவேண்டும். மாறாக அச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அதனைச் செய்ய மறுக்குமாக இருந்தால் அது அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குச் செய்யும் துரோகமாகத்தான் இருக்கும்.
2015 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனகூட கடந்த மாகாண சபை ஆட்சியின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தடையாக இருந்தார் என நாங்கள் அறிந்தோம். இதேபோல் எதிர்வருகின்ற கிழக்குமாகாண சபையில் ஆட்சி அமைத்து முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவாராக இருந்தால் அதற்குரிய பொறுப்பை எமது கட்சித்தலைமைதான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதுபோல் எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்காங்கிரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும். 2012 ஆம் அண்டு கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு எமது கூட்டமைப்பின் தலைவர் முஸ்லிம் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்திருந்தார். எமது 11 உறுப்பினர்களின் ஆதரவையும் தருகின்றோம் என்றார். அதனை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம் காங்கிரஸ் அப்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்திருந்தார்கள். பின்னர் 2 வருடங்களின் பின்னரும் முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கப்பட்டது. அது நாம் அவர்களுக்கு ஒரு நல்லிணக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தோம். ஆனால் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவி வழங்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு மறுக்குமாக இருந்தால் தமிழர்களை தொடர்ச்சியாக ஏமாற்றிய வரலாற்றை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
தற்போது மத்திய அரசாங்கத்தை சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. ஆகவே எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபையில் சிறுபான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.